வவுனியாவில் தேன் என்று சீனிப்பாணியை விற்பனை செய்தவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியாவில் நீண்டகாலமாக அம்பிகைபாலன் கோட்டத்தில் தேன் என்று தெரிவித்து வியாபார நிலையங்களுக்கும்,  பொதுமக்களுக்கும் சீனிப்பாணியை விற்பனை செய்து வந்துள்ளார். 

குறித்த நபர் தொடர்பாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ். லவன், மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோகர் க.தியாகலிங்கம், பொது சுகாதாரப்பரிசோதகர் எஸ். சிவரஞ்சன் ஆகியோரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மரக்காரம்பளையில் வைத்து வியாபார நிலையம் ஒன்றிற்கு சீனிப்பாணியை தேன் என்று விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 30 சீனிப்பாணிப் போத்தல்கள், 200 வெற்றுப்போத்தல்கள், ஒரு வெற்று பரல் போன்ற பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக நெளுக்குளம் பொது சுகாதாரப்பரிசோகர் சி.வேல்டயானினால் நேற்று நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் ஏற்கெனவே இதுபோன்ற ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் தண்டம் விதிக்கப்பட்டவர் என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டது.

 இதையடுத்து குறித்த நபர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கண்டறிந்து இக்குற்றச்சாட்டுகளுக்கு தலா 6ஆயிரம் ரூபாவீதம்  18ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் ஒரு மாத காலம் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டப்பணத்தைச் செலுத்தத்தவறினால் மூன்று மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.