(லியோ நிரோஷ தர்ஷன்)

மேற்கு நாடுகளில் புலம்பெயர் இலங்கை சமூகத்தை இலங்கையில் பெருமளவில் முதலீடுகளைச் செய்யக் கூடிய ஒரு பிரிவினராக நோக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வலியுறுத்தினார்.

இவ்வருடத்திற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கிற்கான ஒழுங்குகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

உள்நாட்டுப் போருக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் வடக்கு - கிழக்கில் பொது மக்கள் மததியில் நம்பிக்கையை ஏற்படுத்த இராணுவம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு போன்ற நிகழ்வுகள் மூலமாக வெளிநாடுகளின் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை புலம்பெயர் சமூகத்துக்கும் தெரியப்படுத்த முடியும். 

அவ்வாறு தெரியப்படுத்தும் போது இலங்கை குறித்து தவறான புரிதலுடன் இன்னமும் இருக்கும் புலம்பெயர் சமூகத்தின் பிரிவினரின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். அவ்வாறான நம்பிக்கை ஏற்படும் போது அந்தச் சமூகத்தில் தலைவர்களாக இருக்கும் கனிசமான பிரிவினர் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதில் நாட்டம் காட்டுவர். 

அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர் சமூகத்துடன் தொடர்புடைய விவகாரத்தை ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.