முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தினை நாடினால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க முடியும். அவர் களமிறங்காது விட்டால் அவரது குடும்பத்திற்கு வெளியே வேட்பாளர் தெரிவினை மேற்கொள்ள வேண்டி வரும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- தற்போதைய சூழலில் கூட்டு எதிர்க்கட்சி எதனை இலக்கு வைத்து செயற்படுகின்றது?
பதில்:- நாங்கள் பொதுத் தேர்தலொன்றை நடத்தப்படவேண்டும் என்பதை எதிர்பார்த்து செயற்படுகின்றோம். அவ்வாறில்லாதவிடத்து மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கோ ஜனாதிபதி தேர்தலுக்கோ முகங்கொடுப்பதற்கும் தயாராகவே உள்ளோம்.
கேள்வி:- கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பதாகவும் அணியணியாகப் பிரிந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றதே?
பதில்:- கூட்டு எதிரணியில் பல கட்சியினர் இருக்கின்ற போதும் தாங்கள் கூறுவது போன்று எந்தவிதமான பிரச்சினைகளோ செயற்பாடுகளோ இல்லை. அவ்வாறு இருந்தாலும் ஒவ்வொரு செவ்வாயன்றும் நடைபெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அதனை பேசித் தீர்மானித்துக்கொள்வோம்.
கேள்வி:- கூட்டு எதிர்கட்சியின் தலைமைத்துவம் தினேஸ் குணவர்த்தனவின் கையிலா மஹிந்த ராஜபக்ஷவின் கையிலா உள்ளது?
பதில்:- மகிந்த ராஜபக்ஷவே தலைவரும் இறுதித்தீர்மானங்களை எடுப்பவராகவும் இருக்கின்றபோதும் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றக் குழுவிற்கான தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.
கேள்வி:- கூட்டு எதிரணி சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தினேஷ் குணவர்த்தனவை நிறுத்தவேண்டுமென்ற முன்மொழிவுகள் உள்ளனவா?
பதில்:- அவ்வாறான எந்தவொரு முன்மொழிவுகளும் செய்யப்படவில்லை கேள்வி:- அப்படியாயின் யாரை களமிறக்குவதற்கு முயற்சிப்பீர்கள்?
பதில்:- என்னைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ஷவே மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும். தேசிய அரச தலைவராக அவரே இருக்கின்றார். அதனால் அவருக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்கு யாரும் எதிர்ப்பு வெளியிடவில்லை. அனைவரினதும் ஏகோபித்த ஆதரவு அவருக்கு உள்ளது.
கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாதல்லவா?
பதில்:- ஆம் உண்மை தான்.
கேள்வி:- அப்படியாயின் நீங்கள் கூறுவது எவ்வாறு நடமுறைச்சாத்தியமாகும்?
பதில்:- பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் பிரகாரம் 19ஆம் திருத்தச்சட்டத்தினை மாற்றியமைக்க முடியும் என்பது ஒருவழியாக இருக்கின்றது. அடுத்ததாக 19ஆவது திருத்தச்சட்டத்தில் சிறிய ஓட்டை உள்ளது. அதனடிப்படையில் நீதிமன்றத்தினை நாடினால் சந்தர்ப்பத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கேள்வி:- இந்த விடயத்தினை சற்று விபரமாகக் கூற முடியுமா?
பதில்:- ஆம், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிட்டுள்ளார். ஆகவே 19ஆவது திருத்தம் அவருக்கு பொருந்தாது. இவ்வாறு 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஓட்டையை மையப்படுத்தி நீதிமன்றத்தினை நாடினால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாளராக களமிறங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி:- நீதிமன்றத்தினை நாடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்:- கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் சம்பந்தமாக மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் கலந்துரையாடியபோது நீதிமன்றத்தினை நாடுவதற்கு தான் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே அது குறித்து நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம்.
கேள்வி:- நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவை முன்மொழிகின்றபோதும் ஜனாதிபதி வேட்பாளராகும் பாதையில் பயணிப்பதாக கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளாரே?
பதில்:- எமது தரப்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி வேட்பாளராகும் எதிர்பார்ப்பு உள்ளது. பெரும்பான்மையான சிங்கள மக்கள் கோத்தாபயவினை விரும்புகின்றார்கள் என்பதே யதார்த்தமாகவுள்ளது. சிறுபான்மை சமூகங்களிடையே கோத்தாபய தொடர்பில் கேள்விக்குறியே காணப்படுகின்றது.
இங்கு தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. கோத்தாபயவை நிறுத்தினால் சிறுபான்மை மக்களின் ஆதரவினை எவ்வாறு பெறமுடியும்? அவரை நிறுத்தி சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்று வாக்குகளைப் பெறுவது என்பது இலகுவான காரியமும் அல்ல. எமது ஆட்சிக்காலத்தின் இறுதிக்காலத்தில் வடக்கிலும் அளுத்கம போன்ற இடங்களிலும் நடைபெற்ற சம்பவங்களால் அவருக்கு சிறுபான்மையினர் வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது.
ஆகவே இவ்வாறான சந்தேகங்களுடன் ஒருவர் முன்னிறுத்தப்படுவதிலும் பார்க்க அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜனநாயகத் தலைவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதையே பெரிதும் விரும்புகின்றோம். கடந்த காலங்களில் ஜனநாயக தலைவர்களே. எமது நாட்டை ஆட்சி செய்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.
கேள்வி:- கோத்தாபய ராஜபக்ஷவின் அண்மைக்கால நகர்வுகள் ஜனாதிபதி வேட்பாளராவதை நோக்கி இருக்கின்ற நிலையில் அவர் பின்வாங்குவார் எனக் கூறமுடியாதல்லவா?
பதில்:- கோத்தாபய ராஜபக்ஷ நல்லவர். ஆனால் அவர் ஜனநாயக கட்டமைப்புக்குள் வரவேண்டியுள்ளது. என்னுடைய பார்வையின் பிரகாரம்ரூபவ் கோத்தாபய ராஜபக்ஷவைச் சூழ ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்கள் என இராணுவ முக்கியஸ்தர்களே உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ உட்பட என் போன்றவர்கள் மக்கள் மத்தியில் இருந்து பணியாற்றியே அரசியல் செயற்பாடுகளில் ரூடவ்டுபட்டுவருகின்றோம். ஆகவே நாம் மக்களின் நிலைமைகளை புரிந்து கொள்ளக்கூடியவர்களான இருக்கின்றோம். நாம் கீழ் மட்டத்திலிருந்து செயற்பட்டு வந்த அரசியல்வாதிகளாக உள்ளோம். கோத்தாபயவும் அவரைச் சூழ உள்ளவர்களும் இராணுவ பயிற்சிகளை பெற்று செயற்பட்டவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை மஹிந்த ராஜபக்ஷவே எடுக்கவுள்ளார்.
கேள்வி:- கோத்தாபய ராஜபக்ஷ நிர்வாகத்திறன் மிக்கவர் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றதல்லவா?
பதில்:- அவருடைய சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்ததன் காரணமாகவும் அதிகாரங்களும்ரூபவ் நிதிவசதிகளும் போதியளவில் இருந்ததனாலுமே பாதுகாப்புச் செயலாளராக அவர் சிறந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
கேள்வி:- கூட்டு எதிரணியில் உள்ள இடதுசாரித் தலைமைகளும் கோத்தாபய களமிறங்குவதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளன. தாங்கள் ஜனநாயகத் தலைவரே முன்நிறுத்தப்பட வேண்டும் என்கின்றீர்கள், இவற்றையெல்லாம் கடந்து அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் சூழல் ஏற்படுமாயின் எத்தகைய தீர்மானத்தினை எடுப்பீர்கள்?
பதில்:- வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட இடதுசாரித்தலைவர்கள் நாட்டுக்கு இராணு ஆட்சி வேண்டாம் என்றே கூறுகின்றார்கள். இராணுவ தளபதிகளால் நாட்டினை ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்ய முடியாது. எமது நாட்டு மக்களும் அதனை விரும்பமாட்டார்கள் என்பற்கு சரத்பொன்சேகாவின் தோல்வி நல்ல உதாரணமாகின்றது. ஜனநாயக நாடான இலங்கையில் மூவின மக்களும் இரவில் அச்சமின்றி நித்திரைக்குச் செல்கின்ற சாதாரண சூழலை பேணக்கூடிய தலைவரே அவசியமாகின்றார்.
கேள்வி:- தாங்கள் தற்போது ஜனநாயகம் குறித்து அதிக கவனம் செலுத்துகின்றீர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருதசாப்த ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்த்துப்பெற்ற அமைச்சராக பணியற்றியவர் என்ற அடிப்படையில் ஜனநாயகம் அக்காலத்தில் பின்னபற்றப்பட்டதா?
பதில்;- விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் நாயகன் மஹிந்தராஜபக்ஷவே. பல்வேறு அழுத்தங்களைக் கடந்து அவரின் துணிச்சலான முடிவுகளின் அடிப்படையில் பாதுகாப்புச்செயலாளரான கோத்தாபய, முப்படைத்தளபதிகள், படைவீரர்கள் என அனைவரும் செயற்பட்டிருந்தனர். மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் இருந்தது. சில சந்தர்ப்பங்களில் செயற்பாட்டு ரீதியாக தடங்கலுக்குள்ளானது.
கேள்வி:- கூட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேருவதில் நியாயம் உள்ளதா?
பதில்:- பொதுத்தேர்தலின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தின் பின்னர் என்னை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்குமாறும் மஹிந்தானந்த அழுத்கமகேவை எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக நியமிக்குமாறும் எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டு அரசாங்கத்தினை அமைத்ததன் காரணமாக எமக்கு எதிர்க்கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தற்போதும் இந்தப் பிரச்சினை உள்ளது. 54 ஆக இருந்த எமது எண்ணிக்கை தற்போது 70ஆகியுள்ளது. நாம் பொதுஜன பெரமுனவின் சார்பில் செயற்பட்டாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே. ஆகவே சபாநாயகரே இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
கேள்வி :- பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி வழங்கியதில் தவறில்லையே?
பதில்:- சம்பிரதாயங்களின் பிரகாரம் அது சரியாக இருந்தாலும் எமது தரப்பினரை எதிரணியாக சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளாரே. ஆகவே எமது அணியினருக்கு அந்த அங்கீகாரத்தினை வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும். அது நாட்டுக்கும் நன்மையாக அமையும்.
கேள்வி:- கூட்டு எதிரணியினை பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பாக அங்கீகரிக்குமிடத்து ஐ.ம.சு.விலிருந்து முழுமையாக வேறுபட்டவர்களாகி விடுவீர்கள். அவ்வாறான நிலையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதல்லவா?
பதில்:- கூட்டு அரசாங்கத்தினை ஏற்றுக்கொள்ளாத ஐ.ம.சு உறுப்பினர்கள் எதிராணில் அமர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அனுமதியளித்தார். ஆகவே எம்மீது ஒழுக்காற்று நடவக்கை எடுக்க முடியாது. தற்போது வரையில் நாம் ஐ.ம.சுவின் உறுப்பினர்களாகவே இருக்கின்றோம்.
கேள்வி:- சுதந்திரக்கட்சி தலைமையில் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்ற நிலையில் தங்களது தரப்புடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டனவா?
பதில்:- தற்போது வரையில் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கூட்டணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபாலவை ஏற்றுக்கொள்ள முடியாது. மஹிந்த ராஜபக்ஷவையே எமது தலைவராக ஏற்றுக்கொள்கின்றோம். ஆகவே சு.க தரப்பினர் பொதுஜன பெரமுனவுடனே பேச்சுவார்த்தை செய்வதற்கு வரவேண்டும்.
கேள்வி:- பேச்சுவார்த்தையொன்றின் மூலம் இணக்கப்பாடு ஏற்பட்டால் மீண்டும் சு.க தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து கொள்வீர்களா?
பதில்;- நாம் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் சு.கதரப்பினரை எம்முடன் இணைத்துக் கொள்ள முடியுமா என்றே முயற்சிகள் எடுத்துப்பார்ப்போம்.
கேள்வி:- சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நீங்கள் பிளவுகளால் அக்கட்சி சீர்குலைவதை விரும்புகின்றீர்களா?
பதில்:- எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். டி.ஏ.ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்தினத் தலைவர்களும் கட்சியை கட்டியெழுப்பினர். திருமதி.பண்டாரயக்க, சந்திரிகா, மஹிந்தராஜபக்ஷ என அனைவரும் கட்சியை பாதுகாத்தனர். அவ்வாறிருக்கையில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கட்சியின் தலைமைத்தவத்தினை பெற்றார். அதன்பின்னரே கட்சி இந்த நிலைமையை அடைந்துள்ளது.ஆகவே அவரே இதற்கன பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி:- அடுத்துவரும் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவீர்கள்?
பதில்:- தற்போது பசில் ராஜபக்ஷ கட்டியெழுப்பிய பொதுஜனபெரமுனவே உள்ளுராட்சி தேர்தலில் முதன்மை இடத்தினைப் பிடித்துள்ளது. ஆகவே அந்தக் கட்சியில் போட்டியிடவுள்ளதோடு அக்கட்சி தலைமையிலான கூட்டணியே தேர்தல்களில் களமிறங்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என்ற தொனியில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தீர்களே?
பதில்:- ஜனாதிபதி வேட்பாளருக்கு மிகப்பொருத்தமானவர் மஹிந்தராஜபக்ஷவே. அவர் களமிறங்காது விட்டால் அந்த இடத்திற்கு பொருந்தக்கூடிய தகமைகள் என்னிடமுள்ளன என்றே கூறினேன்.
கேள்வி:- எத்தகைய தகமைகள் தங்களிடத்தில் உள்ளன என்பதை கூறுவீர்களா?
பதில்:- ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என்னை அகலவத்தை தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமித்து தற்போது 36வருடங்களாகின்றன. தற்போது வரையில் கட்சி மாறவும் இல்லை. அன்று முதல் இன்று வரையில் மக்களுடன் மக்களாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சர், அமைச்சர் என அனுபவங்களை கொண்டுள்ளேன்.
இதனைவிட முக்கியமாக சந்திரிகாவின் ஆட்சியின் நிறைவில் அடுத்த ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவதற்கு அவர் விரும்பியிருக்கவில்லை. அநுர பண்டாரநாயக்கவையே முன்னிலைப்படுத்த முயன்றார். அத்தருணத்தில் நானே முன்னின்று மஹிந்தராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். இதனால் அவர்கள் எனது முகத்தினை பார்க்காது மனக்கசப்புக்கும் உள்ளானார்கள். எனது வலியுறுத்தல் காரணமாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் கடும் போராட்டத்திற்கு மத்தியிலுமே பண்டாரநாயக்க குடும்பத்தினரிடமிருந்து வெளிநபர் வாய்ப்பு வழங்கப்பட்டது.
2015 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற சு.கவின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு அரசாங்கம் அமைக்கும் யோசனையை முன்வைத்தபோது நானே முதலில் எதிர்த்தேன். நான் எதிர்ப்பதாகவும் அந்த இடத்திலிருந்து வெளியேறுவதாகவும் கூறி செயலாளரிடத்தில் அதனை எழுதிக்கொள்ளுமாறு நேரடியாக தெரிவித்துவிட்டே வந்தேன். அச்சமயத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை எதிர்ப்பதால் எனது அரசியல் நிறைவுக்கு வந்துவிடும் என்றும் விமர்ச்சித்தார்கள்.
எதனையும் எதிர்கொள்ளும் முடிவுடன் அவ்வாறு வெளியேறியபோது தான் தங்காலையில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி தனக்கு ஆதரவாக ஒரு உறுப்பினராவது உள்ளார் என்ற மனோநிலையைப் பெற்றார். அது அவருக்கு பாரிய சக்தியை அளித்தது. அவரை பார்வையிடச் சென்ற மக்களின் ஆதரவும் அவருக்கு புத்துணர்ச்சி வழங்கவும் மீண்டும் அரசியல்களம் திரும்பினார். அதன் பின்னர் நுகேகொடவில் நடைபெற்ற முதலாவது எதிரணியின் கூட்டத்தில் பங்கேற்றால் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும என்று ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்திருந்த போதும் கூட நான் அந்த மேடையில் பகிரங்கமாக ஏறினேன். அதனையடுத்து டி.பி.ஏக்கநாயக்கரூபவ் பிரசன்ன ரணதுங்க போன்றவர்களும் வந்தார்கள். தற்போது கூக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் அனைவரும் ஆங்காங்கே ஒழித்திருந்து என்ன நடக்கின்றது என்றே பார்த்தார்கள்.
இதனைவிடவும் சிரேஷ்ட தேரர் சர்வாதிகாரம் தொடர்பான கருத்தினை வெளியிட்டபோது சு.கவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் மீது ஜே.வி.பி.காலத்தில் எத்தகைய கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன.
பெண்களின் முடிகள் வெட்டப்பட்டமை முதல் காணாமலாக்கப்பட்டமை, உயிரிழக்கச் செய்யப்பட்டமை வரை நிலைமகள் மோசமாகவே இருந்தன. அதன் பின்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் எத்தனை அவலங்கள் நிகழ்ந்தன. அவற்றை நேரடியாக அனுபவித்த ஒருவராகவே நான் உள்ளேன். அவை அனைத்துமே எனக்கு மீளவும் நினைவுக்கு வந்தன. அந்த அகோரங்கள் எனக்கு நினைவுக்குவந்தமை இறைவனின் செயலாகவே இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் காணாலாக்கப்படுதல், கடத்தல் போன்ற அச்சுறுத்தல் இடம்பெறமுடியாது. ஆகவே தான் சர்வாதிகார அல்லது ஓய்வுபெற்ற இராணுவ ஆட்சி சற்றுமே பெருந்தாது என்பதை பகிரங்கமாக தெரிவித்தேன்.
கேள்வி:- குடும்பத்திற்கு வெளியே வேட்பாளர் தெரிவு பற்றி மஹிந்தராஜபக்ஷவுடன் கலந்துரையாடினீர்களா?
பதில்:- ஆம்ரூபவ் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடாது விட்டால் அவரது குடும்பத்திற்கு வெளியே வேட்பாளர் தெரிவினை விட்டுவிடும்படி கோரினேன். அதன்போது பண்டாரநாயக்க குடும்பத்தினரிடமிருந்து அவர் அதிகாரத்தினை பெறுவதற்கு போராடியதனையும் நினைவு படுத்தினேன். இருப்பினும் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
கேள்வி:- கடந்த ஆட்சியில் காணாமலாக்கப்படுதல், கடத்தல்கள் கைதுகள் என ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்றபோது தாங்கள் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தீர்கள்?
பதில்:- அந்தக்காலத்தில் நாங்கள் பலவிடயங்களை சுட்டிக்காட்டினோம். ஆனாலும் நாங்கள் சொல்வதை கேட்வில்லை. ஆட்சியின் உயரத்தில் இருந்ததனாலோ தெரியவில்லை.
கேள்வி:- தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- எந்த அரசாங்கமும் இந்த விடயத்திற்கு தீர்வினை வழங்கவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தினைச் செய்து 13ஆவது திருத்தினை கொண்டு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனகூட அதனை முழுமையாக அமுலாக்கவில்லை. ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அவர்களுக்கு அவசியமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்காக சமஷ்டியை அடிப்படையாக வழங்க வேண்டிய அவசியமில்லை.
நேர்காணல்:- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM