தற்போது வெளியாகியுள்ள காவேரி வைத்தியசாலையின் புதிய 7 வது அறிக்கையின் படி கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவேரி வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், ''கருணாநிதியின் உடல் நிலை கடந்த சிலமணி நேரங்களாக மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்ச வைத்திய உபகரணங்கள் உதவியுடன் அவருடைய உடல் உறுப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்தனர்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் உயர்ஸ்தானிகம் உத்தரவிட்டுள்ளது.. 

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி வைத்தியசாலை புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.