(நா.தனுஜா)

ஜனநாயக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவை அதிகரிப்பதற்கு சுவிட்ஸர்லாந்து திட்டமிட்டிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அந் நாட்டின் நீதியமைச்சர் சிமொனெட்டா சொமருகா தெரிவித்ததாக நீதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான குடிப்பெயர்வு ஒத்துழைப்பு உடன்படிக்கையை விரிவு படுத்துவதற்கும் அவர் இணங்கியிருக்கிறார். இது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுடன் அவர் இன்று கைச்சாத்திட்டார். 

மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கான ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும், தொழிற்பயிற்சித் திட்டங்களூடாக இலங்கையில் இளைஞர் யுவதிகளுக்கான சிறந்த வாய்ப்புக்களை உருவாக்குவதற்குமான நிபந்தனைகளை வகுப்பதாக இக் குடிப்பெயர்வு ஒத்துழைப்பு செயற்பாடுகள் அமைகின்றன என்று சொமருகா தெரிவித்தார்.  

அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரையும் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், தேசிய மனித உரிமைக் குழுவின் பிரதிநிதிகள், பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். 

நான்கு நாள் விஜயத்தின் போது உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் நேரடியான தகவல்களைப் பெறவுள்ளார். குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்குத் தொழிலாளர் குடிப்பெயர்வு குறித்து ஆராயவுள்ளார். அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் நிறுவனத்தின் குடிப்பெயர்வு செயற்றிட்ட அலுவலகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புவது தொடர்பான இருதரப்பு குடிவரவு உடன்படிக்கை ஒன்றில் 2016ஆம் ஆண்டு இலங்கையும் சுவிட்ஸர்லாந்தும் கைச்சாத்திட்டிருந்தது. சுவிஸில் சுமார் 51000 இலங்கையர்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் அரைவாசிப்பேர் சுவிஸில் பிரஜாவுரிமை பெற்றுள்ளனர் என நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன