வவுனியா சாந்தசோலை பகுதியில் இன்றும் இரண்டாவது நாட்களாகவும் நுண்நிதி நிறுவனத்திலிருந்து கடன் வழங்கவும் வழங்கிய பணத்தின் கடன்தொகையை வசூலிப்பதற்கும் இன்று காலை  முகாமையாளருடன் சென்ற கடன் வழங்கும் நுண்நிதி நிறுவனத்தின் பணியாளர்கள் அங்கு ஒன்றுகூடிய பொதுமக்கள், மாதர் சங்கத்தினரின் எதிர்ப்பினால் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா சாந்தசோலை கிராமத்திற்கு நேற்று நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் கடன் வழங்கவும், கடன் வழங்கியவர்களிடம் பணம் வசூலிப்பதற்கும் சென்றபோது அப்பகுதி மாதர் சங்கத்தலைவி மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து சாந்தசோலையில் நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறும் இதனால் பல குடும்பங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன் தவறான முடிவுகளுக்கும் பெண்கள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை சாந்தசோலைப்பகுதியில் நிறுத்திக்கொள்ளுமாறும் உங்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடன் தொகையை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சென்று பெற்றுக்கொண்டவர்கள் வழங்குவார்கள்.
எனவே தற்போது இப்பகுதிக்கு வந்து வசூலிப்பததையும் கடன் வழங்குவததையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு தெரிவித்து நிறுவனத்தின் ஊழியருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமது தரப்பு நியாயங்களை எடுத்துக்கூற முற்பட்ட நுண்நிதி நிறுவனத்தின் முகாமையாளர் பொதுமக்களின் எதிர்ப்புக்காரணமாக அங்கிருந்து தமது செயற்பாடுகளை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார். 
இதையடுத்து மாதர் சங்கத்தினர்  கடன் வழங்கிய 11 நுண்நிதி நிறுவனத்திற்கு  சாந்தசோலைப்பகுதியில் வைத்து வீடுகளில் நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டாம் எனத்தெரிவித்து கடிதம் ஒன்றினை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.