(இரோஷா வேலு) 

சூதாட்ட குழுவொன்றின் மீது முகமூடி அணிந்து வந்த கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யடதொல - அளுத்கம வீதியில் மணிக்கொட பகுதியில் சூதாட்ட கும்பல் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோதே வேனில் வந்த முகமூடி அணிந்த கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மூவரும் வாவத்த அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களுள் பனிகல குருளுபத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வீரகோன் முதியன்சலாகே சுரங்க குமார என்பவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் தாக்குதல் சம்பந்தமாக ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட மதுகம பொலிஸார், தாக்குதலுக்கிலக்கானவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்துள்னர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வாவத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.