இலங்கை - இந்திய சங்கம் அதன் பிளாட்டினம் ஆண்டு நிறைவு விழாவும் இந்தியாவின் சுதந்திர தின விழாவும் கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றுது.

இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். 

வெளி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனநாயக்க, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இலங்கை இந்திய சங்கத்தின் தலைவர்  பிரகாஷ் மற்றும் துறைசார் பிரமுகர்கள் மற்றும் ஏனைய துறைசார்ந்தவர்கள் விழாவின் போது பிரசன்னமாகியிருந்தனர்.

இலங்கை இந்திய சங்கம் 1949 இல், இந்தியா மற்றும் இலங்கை என்பன சுதந்திரம் கிடைக்கப் பெற்றதின் பின் உடனடியாக ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கை இந்திய சங்கம் இலங்கையிலுள்ள மிகவும் பழமையானதும் மற்றும் பெரியதுமான ஒரு நட்புறவுச் சங்கமாகும்.

உயர் ஸ்தானிகர் தனது சிறப்புரையை வழங்குகையில், உலகில் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் 6 ஆவது பெரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது எனக் குறிப்பிட்டதுடன் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு அண்மித்ததான இலங்கையின் அமைவிடம் கணிசமான அனுகூலங்களை அதற்கு கொண்டு வரும் எனச் சுட்டிக்காட்டினார். 

இந்திய-இலங்கை உறவுகள் எதிர்காலம் குறித்து நோக்குபவையாக அமைந்திருத்தல் வேண்டுமென இந்திய உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். 

இலங்கை இளைஞர்கள் தங்களது அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் அவற்றை இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்வதற்கு முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினர்.

பல்வேறு மக்கள் குறித்ததாக இலங்கையில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், குறிப்பாக இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் அண்மையில் நாடு முழுவதற்குமாக விஸ்தரிக்கப்பட்ட அவசரநிலை நோயாளர் காவுவண்டிச் சேவை உட்பட அபிவிருத்தி செயல்திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் நேரடியான தாக்கங்களைக் கொண்டதாகவுள்ளது என்பது உரையில் சுட்டிக் காட்டப்பட்டது. 

இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் மக்கள் குறித்ததான 70 ஐ அண்மித்த சிறிய அபிவிருத்திச் செயல்திட்டங்களை இந்தியா செய்துள்ளது என்பதையும் உயர் ஸதானிகர் தனதுரையில் வலியுறுத்தினார்.

அத்தகைய சுமார் 20 செயல்திட்டங்கள் மழைநீர் சேகரிப்பு தாங்கிகள், மலசல கூடங்களின் நிர்மாணம், பொலன்னறுவையில் மும்மொழிப் பாடசாலை போன்று பாடசாலைகளின் தரமுயர்த்துதல் மற்றும் நிர்மாணம், மற்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மாத்தறையிலுள்ள ருகுணுப் பல்கலைக் கழகத்திற்கு 1500 இருக்கைகள் கொண்ட ஒரு கேட்போர் கூடம் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு பௌதிகக் கட்டுமான வசதிகளை அளித்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

இந்தியாவின் அபிவிருத்திப் பங்குடமை ஒரு துறைக்கு அல்லது ஒரு இடத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்காது பல துறைகளுக்கும் பரந்ததாக மற்றும் நாடு முழுவதும் பரவியதாக உள்ளது என்பதை உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். இந்தியா அதன் வாக்குறுதிகளை ஒரு தக்க சமயத்தில் நிறைவேற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகம் என்பது, தங்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களால் அதிகாரமளிக்கப்பட்டதாக உள்ளதினால், அபிவிருத்திப் பயணம் சுமுகமானதும், விரைவானதும் மற்றும் சாத்தியமான வரையில் சௌகரியமானதாக இருப்பதற்கு இந்தியா மற்றும் இலங்கை என்பன பொறுப்புகளைக் கொண்டுள்ளன என உயர் ஸ்தானிகர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

வெறுமனே இரு தரப்புகளிலும் உள்ள அரசாங்கங்கள் மட்டுமன்றி தொழில்துறை, கல்விமான்கள், இளைஞர்கள் மற்றும் சமூகங்கள் என்பனவும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கியமான வகிபாகத்தைக் கொண்டுள்ளன.

விழாவின் போது, இலங்கை இந்திய சங்கத்தின் கடந்த கால தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழா, கொழும்பு ஓரியன்டல் பாடற் குழுவின் ஒரு இசை நிகழ்ச்சி மற்றும் ஒரு இரவு விருந்துபசாரத்துடன் நிறைவுற்றது.