ருவன்வெல்ல பொலிஸ் பிரவிற்குட்பட்ட மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் நகைக் கடை ஒன்றில் தங்கச் சங்கிலி ஒன்றை கொள்ளையிட்டுச் சென்ற இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

26 வயதான ஆண் ஒருவரும் 24 வயதான பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,

குறித்த நகைக் கடைக்கு சென்ற சந்தேக நபர்கள் இருவரும் தங்களை காதலர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு காதலியின் பிறந்த நாளிற்காக தங்கச் சங்கிலி ஒன்றை வாங்க வந்தள்ளதாக கூறியுள்ளனர்.

பல தங்கச் சங்கிலிகளை பார்த்து விட்டு எந்த ஒரு நகையையும் வாங்காமால் குறித்த இருவரும் கடையை விட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த இருவருக்கும் காட்டிய நகைகளை மீள எடுத்து வைக்கும் போது பணியாளர்களால் நகைகள் பரீட்சிக்கப்பட்ட போது 64,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி ஒன்று காணமல் போயுள்ளதனை அறிந்துள்ளனர்.

பணியாளர்களால் கடை உரிமையாளருக்கு தங்கச் சங்கிலி காணமால் போன விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சி.சி.டிவி காணொளிகள் பரீட்சிக்கப்பட்ட போது குறித்த இருவரும் நகையை லாவகமாக திருடிச் சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

பின்னர் கடை உரிமையாளர் சி.சி.டிவி காணொளியுடன் பொலிஸ் நிலையத்திற்க சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் மேற்கொண்ட தேடல் நடவடிக்கையில் குறித்த இருவரும் நேற்று மதியம் ருவன்வெல்ல நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து காளாவாடப்பட்ட தங்கச்சங்கிலியையும் வேறு பல தங்க நகைகளை அடகு வைத்த ரசீதுகளையும்  பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து குறித்த இருவரும் திரமணம் செய்து கொள்ளப் போவதாகவும் திரமணத்திற்காக நகைகளை கொள்வனவு செய்ய வந்துள்ளதாகவும் கூறி கம்பஹா கட்டுநாயக்க மற்றும் அநூராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தங்க நகைக் கடைகளில் திருடி அடகு கடைகளில் அடகு வைத்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.