மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் குளத்தில் நீராடச் சென்ற ஐந்து மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாலச்சோலை எனும் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய தங்கராசா ஜெயசுதன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளான். 

நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த மாணவனை தேடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்த வேளையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை அவன் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குளத்தில் மூழ்கிய நிலையில் கொம்மாதுறையைச் சேர்ந்த விஜயநாதன் விஜயகாந்தன் மற்றும் தங்கராசா ஜெயசுதாகரன் ஆகிய  இருவரும் காப்பாற்றப்பட்டு உடனடியாக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.