பொல்காவெல புகையிரத விபத்தின் காரணமாக அப் பகுதிக்கான புகையிரத போக்குவரத்து சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதனால் புகையிரத போக்குவரத்து சேவை தாமதமாகலாம் என புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்காவெல பகுதியில் உள்ள  பநலிய புகையிரத நிலையத்தில் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றின்  மீது பிறிதொரு ரயில்  பின்னால் சென்று  மோதி  விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இவ்வாறு காயமடைந்தவர்கள் குருணாகல் மற்றும்    பொல்கஹவலை  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சமிக்ஞை கிடைப்பதற்கு  முன்னர் ரம்புக்கன நோக்கி பயணித்த ரயில் பநலிய புகையிரத நிலையத்திற்கு வந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.

அத்துடன் இந்த விபத்தின் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி நேற்று இரவு 8 மணிக்கு புறப்படவிருந்த இரவு நேர தபால் ரயில்சேவை உடனடியாக இரத்து செய்யப்பட்டதாக புகையிரத தலைமையகம் தெரிவித்தது.

தற்போது ஒருவழிப் பாதை சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய பாதைகளை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதனால் அவ் வழியாக இடம்பெறும் போக்குவரத்து சேவை மீண்டும் விரைவாக வழமைக்கு திரும்பும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.