(எம்.எம்.மின்ஹாஜ்)

சட்டம் அனைத்து இனத்தவர்கள் மீதும் சமமாக பிரயோகிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டால் பெரும்பான்மையானாலும் சிறுபான்மையானாலும் நாட்டின் மீது அதிருப்தியே ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களின் அபிலாஷைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தும் போதே சீரான நாட்டை எம்மால் உருவாக்க முடியும். அதற்காக நாம் முயற்சிகளை செய்ய வேண்டும். ஆகவே அனைத்து இனத்தவர்களின் அபிலாஷை மதிக்கும் நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும்.

அத்துடன் இலங்கையை போன்று நாம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிங்கப்பூர் செயற்பட்டு தற்போது சர்வதேச அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இலங்கையின் நிலைமை தற்போது கவலைகிடமாக மாறியுள்ளது. ஆகவே இந்த நிலைமையை நாம் மாற்ற வேண்டும்.

ஆகவே இலங்கையின் அடையாளத்தை நாம் சர்வதேசம் வரை கொண்டு செல்ல வேண்டும். இதன்படி அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக இலங்கையராக வாழ்ந்தால் இலங்கையை முன்னேற்ற முடியும். இதனூடாக சர்வதேச சவால்களை எம்மால் வெற்றிக்கொள்ள முடியும்.