இலங்கை ஆயுர்வேத ஔடதக் கூட்டுத்தாபனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிக் களஞ்சியத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  திறந்து வைத்தார்.

ஆயுர்வேத ஔடதங்களை கொள்வனவு செய்யும் மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்படும் உலர் ஔடதங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் ஔடதங்களை களஞ்சியப்படுத்துவதற்காக இந்த புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு மருத்துவ துறையின் தனித்துவத்தை பாதுகாத்து, தேசிய மற்றும் சர்வதேச மருந்துத் தேவைகளை உயர் நியமங்களுடன் வழங்கும் முன்னோடி நிறுவனமாக இலங்கை ஆயுர்வேத ஔடதக் கூட்டுத்தாபனம் விளங்குகின்றது. 

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் ஆயுர்வேத ஔடத உற்பத்திகளை புதிய துறைகளுக்கு உட்படுத்தி மூலிகை சார்ந்த ஆயுர்வேத உற்பத்திகள் மற்றும் மூலிகை சார்ந்த அழகுசாதன பொருட்கள் உற்பத்தியில் இலங்கை ஆயுர்வேத ஔடதக் கூட்டுத்தாபனம் ஈடுபட்டு வருகின்றது.

இதன் மூலம் ஆயுர்வேத மருந்துப் பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது ஏற்றுமதி செய்யப்படும் அழகுசாதன உற்பத்திகளுக்கு போட்டியாக அதிகரித்த சந்தை வாய்ப்பினை இந்த ஆயுர்வேத மூலிகை உற்பத்திகளால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு 270 மில்லியன் ரூபாவாக இருந்த ஆயுர்வேத உற்பத்திகளுக்கான செலவு 2017ஆம் ஆண்டில் 343 மில்லியன் வரை அதிகரிக்கவும், அவ் உற்பத்திகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் 2014 ஆம் ஆண்டு 340 மில்லியனாக இருந்ததுடன், 2017ஆம் ஆண்டு 501 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமைக்கும் இந்த புதிய அணுகுமுறையே காரணமாகும்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதிபுதிய கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார். இலங்கை ஆயுர்வேத ஔடதக் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 07 புதிய வகை மருந்துகள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டன. 

இந் நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஸல் காசிம், மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, இலங்கை ஆயுர்வேத ஔடதக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.