(லியோ நிரோஷ தர்ஷன்)

வோஷிங்டனில் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தையை அடுத்து , பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி  சிறையில் உள்ள விடுதலை புலிகளை விடுதலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கில்  இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளை கைப்பற்றவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்கள் மற்றும் அவருடன் இணைந்து செயற்படும் அரசியல் தலைவர்களை சிறையிலிடும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்து விட்டது. இதற்கு எதிராக எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணியை நடத்த உள்ளதாகவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது. 

பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் இன்று வெளிப்படையாக ஊடகவியலாளர்களையும் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர்களையும் அச்சுறுத்துகின்றனர். ஆனால் ஊடக அமைப்புகளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினரும் மௌனித்து போயுள்ளனர். 

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.