(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சி தம்மை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளுமாறும் அதற்கிணங்க எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கூட்டு எதிர்கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள தினேஷ் குணவர்தனவிற்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே அது குறித்த தீர்மானத்தை சபாநாயகர் கருஜயசூரிய எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றில் அறிவிக்கவுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. எனவே இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துக்கொண்டது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாகத் தெரிவுசெய்யப்பட்ட 52 உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது கூட்டு எதிரணியாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்தனர்.

எனினும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டைப்பு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதுடன் எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டார். எனவே கூட்டு எதர்க்கட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதனால் அவ்வெதிரணியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைமை தமக்கு வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையுடன் அரசாங்கத்திலிருந்து விலகி தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர். இவ்வாறான நிலையில் உத்தியோகபூர் எதிர்க்கட்சி குறித்து கூட்டு எதிர்க்கட்சி மீண்டும் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க கடந்த வியாழக்கிழமை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்து கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைமைக்கு தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே அக்கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.