வடகொரியா தொடர்ந்தும் தனது அணுவாயுத திட்டங்களை முன்னெடுக்கின்றது என ஐநா தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அறிக்கையொன்றே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

வடகொரியா ஐக்கியநாடுகளின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினர் இந்த அறிக்கையை தயாரித்து பாதுகாப்பு சபையிடம் ஒப்படைத்துள்ளனர்.

வடகொரியா தனது அணுவாயுத திட்டங்களை கைவிடவில்லை அதன் மூலம் ஐநாவின் தீர்மானங்களை அந்த நாடு தொடர்ந்தும் மீறுகின்றது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கப்பல்கள் மத்தியில் எரிபொருளை பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையை வடகொரிய தொடர்கின்றது மேலும் அந்த நாடு சட்டவிரோத ஆயுத விற்பனையையும் தொடர்கின்றது என ஐநா தெரிவித்துள்ளது.

சர்வதேச இடைத்தரகர்கள் மூலம் சிறிய ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களை வடகொரியா விற்பனை செய்கின்றது எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.