ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹதி பெல்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இக் கல்குவாரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

கல்குவாரியில் நேற்று இரவு வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது கற்களை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இப் பயங்கர விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலியான அனைவரும் ஒடிசாவைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.