நாச்சியார், செம ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்து வரும் புதிய படத்திற்கு ஜெயில் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதன ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஏ. ஆர். ரஹ்மானின் உறவினரான ஜி. வி. பிரகாஷ்குமாரை தன்னுடைய இயக்கத்தில் உருவான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்தபாலன். அதனையடுத்து ஜி. வி. பிரகாஷ்குமார் நடிகராக நடிக்கத் தொடங்கி இன்றைய திரையலகில் சிறிய பட்ஜட் படங்களுக்கான நாயகனாக திகழ்கிறார்.

இந்நிலையில் வசந்த பாலன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கியிருக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்திற்கு தற்போது ஜெயில் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து இயக்குநர் வசந்தபாலனிடம் கேட்டபோது,‘ ரொமான்டிக் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் கதையின் நாயகனான ஜி. வி .பிரகாசுக்கும், சிறைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை மையப்படுத்தி இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதி நடிக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு தொடங்கியிருக்கிறது.’ என்றார்.