அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட மஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளிகளை புகைப்படம் எடுக்க சென்ற ஊடகவியலாளர்கள‍ை வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்தியசாலைக்குள் உட்பிரவேசிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தேசியக் கொள்கையொன்று இல்லாமல் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வுப்பெற்று தருமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் இன்றைய தினம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக  முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்க்ள பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறித்த இந்த சம்பவத்தை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களையே அங்கு காவலில் இருந்த காவலாளிகள் தடுத்து நிறுத்தியதுடன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தொகுதியிலும்  உட்பிரவேசிப்பதற்கான அனுமதியும் மறுத்துள்ளனர்.

மாஞ்சோலை வைத்தியசாலைக்குள் ஊடகவியலாளர்கள‍ை ஏன் அனுமதிப்பதில்லை என சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் கேட்டபோது அவர்கள், மருத்துவமனைக்குள் நடக்கும் கேடுகளை ஊடகவியலாளர்கள் வெளியில் தெரியப்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு உட்பிரவேசிக்க அனுமதி மறுக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டனர்.