(எம்.சி.நஜிமுதீன்)

எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுமிடத்து அப்பதவியில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராகச் செயற்படும் தினேஷ் குணவர்தனவை நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கூட்டு எதிர்க்ட்சிக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படுமாக இருந்தால் அப்பதவிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராகச் செயற்படும் தினேஷ் குணவர்த்தனவை நியமிக்க கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

எமது தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். ஆகவே அவர் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமையை ஏற்காத சந்தர்பத்தில் தினேஷ் குணவர்தனவே அப்பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

எனவே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன் அதற்கிணங்கவே தினேஷ் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு கோரிக்கை கடித்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளோம் என்றார்.