(இராஜதுரை ஹஷான்)

பொது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள அமைச்சர்களுக்கு சலுகைகளை அதிகரிப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இன்று பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டே தேசிய அரசாங்கம் தேசிய வளங்களை பிற நாட்டு முதலீட்டாளர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கின்றது. ஆனால் மறுபுறம் அமைச்சர்களுக்கு மாத  கொடுப்பனவுகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  தறபோது அமைச்சு பதவிகளில் இருப்பவர்கள் ஏழ்மையான வாழ்க்கையினை வாழ்பவர்கள் அல்ல அனைவரும் செல்வந்தர்களாகவே காணப்படுகின்றனர். ஆகவே  இவர்களுக்கான வேதன அதிகரிப்பு தேவையற்றதாகும்.

அமைச்சர்களின் வேதன அதிகரிப்பு காரணாக பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் மக்களின் மீதான வரிச்சுமை அதிகரிக்கும்.  தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக மக்கள்  பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பல குடும்பங்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து தற்கொலையினை செய்தக்கொண்டுள்ளனர். மறுபுறம்  வேதன அதிகரிப்பு கோரி   அனைத்து துறைசார் உறுப்பினர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இவற்றிற்கு எல்லாம் அரசாங்கம் தீர்வு வழங்காமல்  சொகுசு வாழ்க்கை வாழும் அமைச்சர்களின் வாழ்க்கையினை மேலும் மேம்படுத்தும்  வகையில்  சம்பள அதிகரிப்பானது  மக்களுக்க இழைக்கும் துரோகமாகவே காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.