(எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உட்பட வேலைநிறுத்த போராட்டங்களுக்கான நிதி அனுசரணையை சீனாவே வழங்கி நாட்டையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்க முயல்கிறது என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் சீனாவே உள்ளது. போராட்டங்கள் நடத்தும் அளவுக்கு மஹிந்த அணியினருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது. ஆகவே மஹிந்த அணியினர் பேரணிக்கும் நாட்டில் நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டங்களுக்கும் சீனாவே நிதி வழங்குகின்றது. 

இலங்கையில் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தவே சீனா இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. சீனா விவகாரத்தில் கழுத்து நசுக்கப்பட்ட நிலைமையிலேயே நாம் உள்ளோம். ஆகவே எமது நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என சீனாவிடம் நான் தலைகுனிந்து வேண்டுகின்றேன்.

அத்துடன் பொன்சேகாவுக்கு அருகில் இருந்த பாதாள கோஷ்டி ஒருவரை கைது செய்ததை போன்று ஏனைய அமைச்சர்களின் பதாள கோஷ்டியினரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.