மலையக மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த சாதாரண அரசியல்வாதிகள் என தன்னை குறிப்பிட்டு தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மலையக மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து அதனை பூர்த்தி செய்து வருவதில் திருப்தி அடைவதாகவும் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமைய 28 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட கதிரேசன் கல்லூரிக்கு செல்லும் பாதை திறப்பு விழா நேற்று  இடம்பெற்றது.

இதன் போது கதிரேசன் கல்லூரியின் பழைய  மாணவர் சங்கதாதினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குறித்த திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் அரசியல்வாதிகளை தெரிவு செய்வது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவே தவிர அவர்களை கண்டு பயப்படுவதற்கல்ல என தெரிவித்த அமைச்சர் அவ்வாறு அரசியல்வாதிகளை கண்டுபயப்பட்டால் அவர் அரசியல்வாதிகள் அல்ல பயங்கரவாதிகள்.

அரசியல்வாதிகள் என்றால் மக்களிடம் அன்பாக பழக வேண்டும். அவர்களின் தேவையுணர்ந்து சேவை செய்யவேண்டும். ஆனால் மலையகத்தில் அந்த நிலை மாறியுள்ளது.

நான் அவ்வாறு அல்ல எந்த நேரத்திலும் என்னோடு தொடர்பு கொள்ளலாம். தேவைகளை கூறலாம் அதை  நான் தீர்த்து வைப்பேன்.

சிலர் முதலில் பாராளுமன்ற உறுப்பினராவார்கள் பின் அமைச்சராவார்கள் அவர்கள் தான் பெரியவர்கள் என காட்டிக் கொள்வார்கள். ஆனால் நான் அவ்வாறு அல்லாமல் நமது மக்களின் கஷ்ட நஷ்டங்களை சாதாரண மட்டத்திலிருந்து உணர்ந்தமையினால் மக்களின் தேவை உணர்ந்து அடிப்படை தேவைகளை உணர்ந்து சேவைகளை மனநிறைவுடன் முன்னெடுப்பதால் யாரும் என்னைக்கண்டு பயப்படுவதோ தள்ளி நிற்கவோ தேவையில்லை.

எனது அமைச்சியினூடாக பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்கு நிதிகளை வழங்கினாலும் அந்த நிதிகளினூடாக செய்யப்படும் அபிவிருத்திகளை மத்திய மாகாண கல்வி அமைச்சு தடுத்து வருகின்றது.

அந்தவகையில் ஹட்டன் பொஸ்கோ கல்லூரிக்கு ஒரு கோடி, மஸ்கெலியா கவரவில  பாடசாலைக்கு ஒரு கோடி, பொகவந்தலாவ பாடசாலைக்கு 65 இலட்சம் நிதி வழங்கியும்  இப்பணத்தின் பலனை இப்பாடசாலைகள் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அபிவிருத்தியில் பின் நோக்கி செல்வது நமது சமூகமாகும்.

நெல்லை யார் குத்தினால் என்ன எமக்கு வேண்டும் அரிசி என சமூக முன்னேற்றத்திற்கு யார் உதவினாலும் அதை வரவேற்று பணிகளை பூர்த்தியாக்கிக்கொள்ள வேண்டும்.

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் அபிவிருத்திக்கு எத்தனை கோடி வேண்டுமானாலூம் கொடுக்க தயார் காரணம் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் திடமானவர்கள் பலமிக்கவர்கள் என்று தெரிவித்த அவர் கலாசார மண்டபம் ஒன்றை அமைக்க 25 இலட்சம் ரூபா நிதி வழங்குவதாகவும் உறுதியளித்தார்.