முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்தத் தவறுமானால், மக்களோடு இணைந்து அவர்களின் உரிமைக்காக போராடுவதைத்தவிர வேறு வழி எதுவுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவிததுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்த மீனவர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு பெரும் இழப்புக்களை சந்தித்து வாழ்கின்ற இந்த மீனவர்கள் தமது வாழ்வாதார தொழிலை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையயும் தடுத்து நிறுத்தி, மீனவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்த அரசாங்கம் தவறுமானால் மக்களோடு மக்களாக இணைந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.