(எம்.எம்.மின்ஹாஜ்)

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர். இதற்கு சபாநாயகர் உரிய பதில் வழங்காவிடின் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. 

எனினும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்கட்சியினரால் கோர முடியாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த விவகாரம் குறித்து சபாநாயகரும் பாராளுமன்ற கட்சி தலைவர்களும் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிய கடிதத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வழங்கப்படும் உத்தியோகப்பூர்வ பதிலை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பார் என்பது குறிப்பிடதக்கது.