தலவாக்கலை - மட்டுகலை தோட்டத்தின் ஊடாக ரதல்ல பிரதான வீதிக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பனிடாமல் பாதை எது ? குழி எது என்று தெரியாத அளவிற்கு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

குறித்த பாதையினை 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு இப்பாதையில் தோட்ட நிர்வாகங்களுக்கு சொந்தமான கொழுந்து ஏற்றும் லொறிகள், தனியார் வாகனங்கள் செல்கின்றன.

கர்ப்பிணி தாய்மார்கள் செல்ல முடியாத துயரங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்ற இதேவேளை, சில கர்ப்பிணி தாய்மார்கள் வாகனங்களில் செல்லும் போது தனது பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் குழந்தை பிரசவமாகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாதையை புனரமைக்குமாறு பிரதேச மக்கள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் பல வருடகாலமாக குறித்த பகுதி மக்கள் எதிர் நோக்கி வந்த பாதை பிரச்சினை தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு பிரதேசசபை உறுப்பினர் சிவஞானம் கொண்டுவந்ததையடுத்து குறித்த பாதையினை செப்பனியிட அமைச்சரின் நிதியில் ஒரு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.