நான் அ.தி.மு.க.விலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணையவிருப்பதாக வெளியான தகவல் தவறானது. நான் என்றைக்கும் அ.தி.மு.க.காரன் தான் என்று  அ.தி.மு.கவின் முன்னாள் மக்களவை உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

‘ நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான். என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக கடிதம் தரவில்லை. என்னை ஏன் நீக்கினார்கள்? என்ற விளக்கமும் தரவில்லை. காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தேன். 

தேவை ஏற்படவில்லை என கூறி இருக்கலாம்.

 ஓ.பன்னீர்செல்வம் தான் முயற்சி எடுத்து என்னை நீக்குவதாக அறிவித்துள்ளார். 

சசிகலாவுக்கு எதிராக நான் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்ததற்கு நன்றி விசுவாசமாக இதை செய்துள்ளார். ஆனால் என்னிடம் கட்சியில் மீண்டும் சேர்க்க கடிதம் கேட்டனர். என் மீது எந்த தவறும் கிடையாது என்பதால் நான் கொடுக்கவில்லை. 

நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான். நான் பாரதிய ஜனதாவில் இணைய முயற்சிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.’ என்றார்.

இதனிடையே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அ.தி.மு.கவில் அதிருப்தியுடன் இருக்கும் முக்கிய தலைவர்களை சந்தித்து வருவதாகவும், அந்த வகையில் இவர் அண்மையில் ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மைத்ரேயன் அவர்களை சந்தித்ததாகவும், தற்போது கே.சி.பழனிச்சாமியை சந்தித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.