"எமது கிரிக்கெட் ஆயுளில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­பட்­ட­தில்லை. நாட்­டுக்­கா­கவும் அணிக்­காகவும் தூய்­மை­யான விளை­யாட்டை நாம் விளை­யா­டி­யுள்ளோம் என்ற திருப்­தி­யுடன் வாழ்­கின்றோம்" என முன்னாள் கிரிக்கெட் ஜாம்­ப­வான்­க­ளான அர்­ஜுன ரண­துங்க மற்றும் அர­விந்த டி சில்வா ஆகியோர் கூறியுள்ளனர்.

தென்­னா­பி­ரிக்க – இலங்கை முதல் ஒருநாள் தொட­ருக்கு முன்னர் திலங்க ஏன் ஆடு­கள கண்­கா­ணிப்பில் ஈடு­பட்டார்? அணியில் ஏன் திடீர் மாற்­றங்கள் ஏற்­பட்­டன என்­பதை விசா­ரித்தால் பின்­ன­ணியில் உண்­மைகள் வெளி­வரும் என்று அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க பகி­ரங்க குற்­றச்­சாட்­டையும் முன்­வைத்­துள்ளார். 

இலங்கைக் கிரிக்கெட் வர­லாற்றில் முதலில் ஆட்ட நிர்­ணய சதியில் அப்­போ­தைய பிர­பல கிரிக்கெட் வீரர்­க­ளான அர்­ஜுன ரண­துங்க மற்றும் அர­விந்த டி சில்வா ஆகிய இரு­வரும் ஈடு­பட்­டனர் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் திலங்க சும­தி­பால குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ள நிலையில் அது குறித்து தமது தரப்பு நியா­யங்­களை முன்­வைக்க முன்னாள் அணித் தலை­வர்­க­ளா­கிய அர்­ஜுன ரண­துங்க மற்றும் அர­விந்த டி சில்வா ஆகிய இரு­வரும் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்துக் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர். அவர்கள் கூறு­கையில்,

நாம் ஒரு­போதும் கிரிக்கெட் சூதாட்­டத்­திலோ ஆட்ட நிர்­ணய சதி­யிலோ ஈடு­ப­ட­வில்லை. 1994 ஆம் ஆண்டு "லக் நவ்"தொடரின் போது நாம் ஆட்ட நிர்­ணய சதியில் ஈடு­பட்­ட­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்டு எம்­மீது சர்­வ­தேச கிரிக்கெட் சபை விசா­ரணை நடத்­தி­யது. எனினும் அவ் விசா­ரணை மிக எளி­தாக முடி­வுக்கு வந்து நாம் நிர­ப­ரா­திகள் என்ற தீர்ப்பும் வந்­தது. அதன் பின்னர் நாம் தொடர்ச்­சி­யாக சிறப்­பான கிரிக்­கெட்டை விளை­யா­டினோம். எனினும் 1991 ஆம் ஆண்டு எம்.கே.குப்தா என்ற இந்­திய நபரை சந்­தித்­த­தா­கவும் அவர் மூல­மாக ஆட்ட நிர்­ணய சதியில் ஈடு­பட்­ட­தா­கவும் கூறி எம்மை அவ­ம­திக்கும் வகையில் திலங்க சும­தி­பால நடந்­து­கொண்­டுள்ளார். எம்.கே.குப்தா என்ற நபர் யார் என்றே எமக்குத் தெரி­யாது. எம்மை பலர் சந்­தித்துப் பேசு­கின்­றனர். அவர்­களை எல்லாம் எம்மால் நினைவில் வைத்­தி­ருக்க முடி­யாது. 

எவ்­வாறு இருப்­பினும் திலங்க சும­தி­பால முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்டு அடிப்­ப­டை­யற்ற ஒன்­றாகும். இது குறித்து நாம் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை. நாம் கிரிக்­கெட்டை நேசிக்கும் நபர்கள். இலங்கைக் கிரிக்கெட் வர­லாற்றில் 1996 ஆம் ஆண்டு அணியே மிகச்­சி­றந்த அணி­யாகும். எம் இரு­வ­ருக்கும் கிடைத்த மிகச் சிறந்த அணி­யாக இன்­று­வரை நாம் அதனையே கரு­து­கின்றோம். அதனால் தான் நாங்கள் அனை­வரும் இன்­று­வரை ஒன்­றா­கவே உள்ளோம். எனினும் திலங்க சும­தி­பால இவ்­வாறு ஏன் பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைக்க வேண்டும் என்று எமக்குத் தெரி­யாது. சுமார் 20 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற – அதிலும் நாம் நிர­ப­ரா­திகள் என்று நிரூ­ப­ண­மான – ஒரு சம்­ப­வத்தைப் பொய்­யாகப் புனைந்து இவ்­வாறு எம்­ மீது தவ­றான விமர்­ச­னங்­களை முன்­வைப்­பதை ஏற்­று­க்கொள்ள முடி­யாது. 

15 ஆயிரம் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்­காக நாட்­டையும் கிரிக்­கெட்­டையும் காட்­டிக்­கொ­டுக்கும் கீழ்த்­த­ர­மான எண்ணம் எமக்கு எப்­போதும் இருந்­த­தில்லை. நாம் நினைத்­தி­ருந்தால் அப் போட்­டி­களில் தோற்று கோடிக் கணக்கில் பணம் சம்­பா­தித்­தி­ருக்க முடியும். ஆனால் எமக்கு அவ்­வா­றான கீழ்த்­த­ர­மான எண்ணம் எப்­போதும் இருந்­த­தில்லை. சில வேளை­களில் சூதாட்­ட­க்கா­ரர்­களின் வேண்­டு­கோ­ளுக்கிணங்க எம்மை அழிக்க வேண்டும். கிரிக்­கெட்டில் எமது தலை­யீடு இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக திலங்க இவ்­வாறு பொய்ப் பிர­சாரம் செய்­யலாம் என்ற சந்­தேகம் உள்­ளது என்று குறிப்­பிட்­டனர். அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க பிரத்­தி­யே­க­மாகக் கூறு­கையில், 

சூதாட்­டத்தில் பெயர் போன நபர்கள் என்­னையும் அர­விந்­த­வையும் குற்றம் சுமத்தும் நிலைமை இன்று உரு­வா­கி­யுள்­ளதை எண்ணிக் கவ­லைப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. இலங்கை வர­லாற்றில் மிக அண்­மைய காலங்­க­ளி­லேயே உள்ளூர் போட்­டி­களில் சூதாட்டம் இடம்­பெற்­ற­தாக அறிய முடிந்­தது. இவை அனைத்தின் பின்­ன­ணி­யிலும் ஒரு சிலரே உள்­ளனர். அவர்­களே நிர்வா­கி­க­ளாக இருந்­து­கொண்டு கிரிக்­கெட்டை மோச­மான பாதைக்குக் கொண்டு செல்­கின்­றனர். தற்­போது தென்­னா­பி­ரிக்க சுற்­றுப்­ப­யணத் தொடர் இடம்­பெற்று வரு­கின்­றது. இதில் முதல் போட்டி தம்­புள்­ளையில் இடம்­பெற்ற போது போட்­டிக்கு முதல் நாள் திலங்க சும­தி­பால அங்கு ஏன் வந்தார்? அவர் ஆடு­கள பரி­சோ­த­னையில் (கண்­கா­ணிப்பு) ஏன் ஈடு­பட்டார்? அணி வீரர்கள் ஏன் மாற்­றப்­பட்­டனர்? இக் கேள்­விகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். இலங்கை அணி மோசமாக விளையாட ஏதுவான காரணியும் தெரியும் என்றார்.