(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான உறுதியான தீர்மானமொன்று நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சி மறுசீரமைப்பு குழுக் கூட்டத்தின்போது எடுக்கவிருப்பதாக பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரில் சிலர் பாராளுமன்றத்தில் எதிரணி தரப்பில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். 

சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவில்லை இவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிய பிறகும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாகவே செயற்படுவதென்பது அனுமதிக்கப்பட முடியாதது. அதனால் அவர்களின் நிலை குறித்து திட்டவட்டமான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டியிருக்கின்றது.

ஆகையால் நாளை மறுதினம் சுதந்திரக் கட்சியின் கொழும்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ள கட்சி மறுசீரமைப்பு கூட்டத்தின் போது இவர்கள் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.