எம்முடைய வீட்டருகில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து உரிய விசாரணை தேவை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி. டி. வி. தினகரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர்  தெரிவித்ததாவது,

‘எம்முடைய வீட்டருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும். எமக்கு தனிப்பட்ட முறையில் விரோதிகள் யாரும் கிடையாது. அரசியல் காரணமாக யாராவது விரோதிகள் இந்த சம்பவத்தை தூண்டியிருக்கலாம். 

குறித்த சம்பவத்திற்கு பிறகு கட்சியின் நிர்வாகிகள் எமக்கு பொலிஸ் பாதுகாப்பு கேட்கலாம் என்று கூறினார்கள். அதே சமயத்தில் இது போன்ற நாடகத்தை நடத்தி பாதுகாப்பு கேட்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நானும் அத்தகைய அரசியல் கட்சி தலைவர் அல்ல.’ என்றார்.

இதனிடையே டி. டி. வி. தினகரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரி அக்கட்சியின் சார்பில் நிர்வாகிகள் மாநில பொலிஸ் ஆணையரிடம் மனு அளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.