(எம்.எம்.மின்ஹாஜ்)

இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்படும் அன்பியூலன்ஸ் சேவை வேண்டாம் எனில் இலங்கையிலுள்ள தனவந்தர்கள் அம்புயூலன்ஸ்களை தந்து உதவுங்கள். இதனூடாக விபத்துகளின் போது உயிரிழப்புக்கள் ஏற்படுவதை  தடுப்பதற்கு எம்மால் முடியும். தரமான அம்புயூலன்ஸ் சேவை இருக்குமாயின் நேற்று முன் தினம் பண்டாரகம விபத்தில் நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என்று பிரதி வெ ளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.

அத்துடன் தொழில்நுட்ப மற்றும் வர்தத்க (எட்கா) ஒப்பந்திற்கும் இந்திய அம்புயூலன்ஸ் சேவைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. எமது வேலைத்திட்டத்தை சிலர் திசைதிருப்ப பார்கின்றனர். எனவே நாங்கள் சடலங்களை வைத்து அரசியல் செய்ய  தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே    அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ஹர்ஷ  டீ சில்வா மேலும் குறிப்பிடுகையில்,

பண்டாரகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். அவசர அம்புயூலன்ஸ் சேவை இருந்திருந்தால் இவ்வாறான உயிரிழப்புகளை எம்மால் தடுத்திருக்க முடியும். எனினும் இலங்கை சுகாதார சேவை தரமானது என்ற போதிலும் அவசர சிகிச்சை பிரிவுகளில்  பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அம்புலன்ஸ் சேவையிலேயே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதற்காகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அம்புயூலன்ஸ் சேவையை  மேம்படுத்துவதற்காக 100 பில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்கியிருந்தார். இதன்பிரகாரம் உலகில் தரம் வாய்ந்த அம்புயூலன்ஸ் சேவையை இலங்கையில் இயக்குவதற்கு சுகாதார அமைச்சினால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தம் ஒரு வருடம் மாத்திரமே செல்லுப்படியாகும். அதன்பின்னர் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்.  

இதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் கண்காணிப்பின கீழ் குறித்த சேவை இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 600 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதன்படி  மேல்  மற்றும் தென் மாகாணங்களில் 88 அம்புயூலன்ஸ் சேவையை முதலில் ஆரம்பிக்க உள்ளோம். குறித்த செயற்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் நாடுபூராகவும் இதனை  கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். 

எனினும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அம்புயூலன்ஸ் சேவையை  எட்கா என்ற தொழில்நுட்ப ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி காட்ட முனைகின்றனர். இது மிகவும் தவறான செயற்பாடாகும். தொழில் மற்றும் வர்த்தக (எட்கா) என்ற ஒப்பந்ததிற்கும் இந்திய அம்புயூலன்ஸ் சேவைக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது.  

நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தவே இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். நாட்டு மக்களுக்கான நலன்சாரந்த விடயங்களில் வீணான முறையில் தலையிட வேண்டாம் என்றார்.