உலகில் 400 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் சரிபாதி பெண்கள் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

இது குறித்து வைத்திய நிபுணர் நல்லபெருமாள் தெரிவித்ததாவது,

முதலில் நீரிழிவு பரம்பரை நோய் என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. நாம் எவ்வாறான உணவுகளை உட்கொள்கிறோம்? எவ்வளவு நேரம் உடற்பயிற்சிகாக ஒதுக்குகிறோம்? எவ்வாறான மன அழுத்தத்தில் இருக்கிறோம்? உறக்க மின்மையால் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம்? எவ்வளவு நேரம் ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுகிறோம்? என்பதையெல்லாம் பொறுத்து தான் ஒருவருக்கு நீரிழிவு நோய் வருகிறது அல்லது வராமல் தடுக்கப்படுகிறது.

சென்ற தலைமுறையில் பெண்கள் அரைப்பது, இடிப்பது, புடைப்பது, துடைப்பது, பெருக்குவது என இல்லப்பணிகளை அயராது செய்து வந்தனர். அதே போல் வெளியில் எங்கேனும் செல்வதாக இருந்தால் நடந்தே சென்றார்கள். ஆனால் இன்று எம்முடைய வாழ்க்கை நடைமுறை மாறிவிட்டது. விளிம்பு நிலை மக்களிடம் கூட மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் இருக்கின்றன. இதனால் அவர்களின் சமையலறை பணிநேரம் குறைந்தது. ஆனால் நீரிழிவு நோய் ஆட்கொண்டுவிட்டது.

அதே சமயத்தில் இயற்கையாக பெண்களுக்கு பூப்பெய்தல், மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், பேறுகாலம், பிரவசம், மாதவிலக்கு நிற்பது என எல்லாம் பெண்களுக்கே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலகளவில் அதிகளவிலான பெண்களுக்கு இதய பாதிப்பும், பக்கவாதமும் ஏற்படுகிறது. மன அழுத்தமும், நீரிழிவும் உருவாகிறது. 

அத்துடன் பெண்கள் தங்களின் வருவாயை பெருக்கிக் கொள்ள பணி செய்கிறார்கள். இதனால் வீடு அலுவலகம், மீண்டும் வீடு என பல இடங்களிலும் உள்ள பல்வேறு உளவியல் காரணிகளால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அத்துடன் வருவாய் குறைவாக இருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் சுய வைத்தியம் செய்து கொள்வதில் தான ஆர்வம் காட்டுகிறார்கள். 

பெண்கள் நீரிழிவு வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால் பதினான்கு வயது முதலே துரித உணவு வகைகளை முற்றாக தவிர்த்துவிடவேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் போஷாக்கான உணவுகளை  உட்கொள்ளவேண்டும். உடற்பயிற்சிகளையும் தவறாமல் செய்து வரவேண்டும். முன்பெல்லாம் சமையலில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை சேர்த்துக் கொண்டார்கள். 

ஆனால் தற்போது ஒரு சில எண்ணெய்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இதன் காரணமாகவும் இதய பாதிப்பு வரக்கூடும். பேறு காலத்தில் நீரிழிவு நோய் வராமல் இருக்கவேண்டும் என்றால், திருமணத்திற்கு ஆறு மாதம் முன்பிருந்தே உணவு வகைகளையும், உடற்பயிற்சிகளையும் திட்டமிட்டு சரியான நேரத்தில் செய்து வரவேண்டும். இப்படி செய்து வந்தால் பேறு கால நீரிழிவு நோயை வராமல் தடுக்கலாம்.’ என்றார்.