இலங்கையில் ஒரு சர்வாதிகார ஆட்சி உருவாவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது. அதேவேளை விடுதலைப்புலிகளுடனான போரின் போது பெரும் எண்ணிக்கையான இராணுவம் பயன்படுத்தப்பட்ட போதிலும் கோத்தாபய தலைமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் , இலங்கையில் சர்வாதிகார அல்லது இராணுவ ஆட்சியை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாத மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நீண்ட அனுபவம் கொண்டவரும் ஆய்வாளருமான கேர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் ஏற்படும் எதிர்விளைவுகள், இந்தியாவின் நிலைப்பாடுகள், இராஜதந்திர ரீதியிலான நகர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் மாற்றம் அடைந்து வரும் அரசியல் கள நிலைமைகளின் பின்னணியில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை மத்தள விமான நிலையத்தினை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு நெடுஞ்சாலை ஒன்றை அமைக்க ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மூன்று நாடுகள் பிரவேசிப்பதால் இராஜதந்திர ரீதியில் இந்தியா இதனை எத்தகைய கண்ணோட்டத்துடன் பார்க்கின்றது என்று கேட்ட போது, இதில் மூன்று நிகழ்வுகளின் தாக்கங்கள் தென்படுகின்றன. ஆகவே அவற்றை முதலில் தனித்தனியாக நோக்கிய பிறகுதான் அவற்றின் ஒன்று சேர்ந்த தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
முதலாவது சீனாவுக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் துறைமுகத்தினுள் செயற்கை தீவொன்று சீனாவுக்கு வழங்கப்பட்ட உரிமையை பார்க்கையில், ஏற்கனவே சீனாவுக்கு துறைமுகத்திலும் அதைச்சார்ந்த பகுதிகளிலும் வழங்கப்பட்டுள்ள 99 ஆண்டு ஆளுமை உரிமையின் விளைவே இதுவாகும். காலப்போக்கில் அங்கே இலங்கை அரசின் ஆளுமை பெயரளவில் இருந்தாலும் மெதுவாக சீனாவின் ஆதிக்கம் ஓங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பது இந்தியப் பெருங் கடலில் சீன ஊடுருவலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் எவ்வாறு உதவக்கூடும் என்ற அமெரிக்காவின் கவலைக்கான பதிலாகும். ஆனால் இலங்கை கடற்படையானது கடலோர பாதுகாப்புக்கே தகுதி வாய்ந்ததாகும். ஆகவே அந்தக் கடற்படையில் எந்த அளவில் நீர்மூழ்கிகளின் கண்காணிப்பை செயலாக்க முடியும் என்பது கேள்விக் குறியாகின்றது.
மத்தள விமான நிலையத்தை இந்திய நிர்வாகத்திற்கு ஒப்படைப்பது அதை இலாபகரமாக நடத்துவதற்கான வியாபார விரிவாக்கம் என்று கூறலாம். இருந்தாலும் இலங்கை அரசுக்கு சீனாவுடன் வளர்ந்து வரும் நெருங்கிய உறவின் காரணமாக தனது இந்திய உறவில் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு சமநிலைப்படுத்த உதவும் முயற்சி என்று கருதுகிறேன்.
இந்தியா மத்தள விமான நிலையத்தின் ஊடாக பிரவேசிப்பதானது அம்பாந்தோட்டையில் கால்பதிக்க உதவும் என்று சீனா கருதும். ஆனால் அது இந்தியா எவ்வாறு மத்தள விமான நிலையத்தை உபயோகிக்கும் என்பதைப் பொறுத்துள்ளது.
அதுபோன்று ஐப்பானுடனான நெடுஞ்சாலை கட்டுமான ஒப்பந்தமானது இலங்கை முழுமையாக சீனாவின் பொருளாதாரப் பிடிப்பில் இல்லை என்று உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒரு முயற்சி என்றே தோன்றுகிறது. ஆக இந்த நிகழ்வுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இலங்கையில் வலுத்துவரும் சீனப் பிரவேசத்தின் விளைவாக இலங்கையின் நட்பு நாடுகளான இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய மேற்கு நாடுகளிடையே இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பைப் பற்றிய கரிசனத்தின் அதிகரிப்பைக் காட்டுகின்றது.
அவற்றை அந்நாடுகளின் இராஜதந்திர வெளியீடு என்று கருதலாம். ஆகவே இலங்கையில் சீனாவின் ஆளுமை தொடர்ந்து வளர்ந்து வரும் சூழ்நிலையில், இலங்கை அரசு தனது சீன உறவை மற்ற நேச நாடுகளுடன் சமநிலைப்படுத்தக் கடினமாக செயல்படும் என எதிர்பார்க்கலாம் என்றார்.
இதேவேளை, கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் இராணுவ அல்லது சர்வாதிகார ஆட்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றமை தொடர்பில், இந்தியா எத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கும் என்பது குறித்து கருத்து வெளியிட்ட அவர் ,
இந்த விடயத்திற்கு நான் நடுநிலையுடன் பதிலளிக்க முனைகிறேன். ஏனெனில், இலங்கையை ஜனநாயகப் பாதையிலிருந்து மாற்றி எளிதாக இராணுவ ஆட்சியாக மாற்ற முடியும் என்ற கூற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. கோத்தாபய கடந்த காலத்தில் அவ்வாறு செய்யவில்லை. அதே நேரத்தில் விடுதலைப் புலிகளை எதிர்த்து நடந்த நாலாவது ஈழப்போரின் போது, அவசரகாலச் சூழல் அறிவிக்கப்பட்ட தருணத்தில் இராணுவத்தின் கை ஓங்கியிருந்ததும், பயங்கரவாதச் சட்டத்தை ஆட்சியினர் துஷ்பிரயோகம் செய்து மனித உரிமையை மதிக்காமல் செயல்பட்டதும் உண்மையே.
அந்தக் காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களின் விளைவே மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஆட்சி மீண்டும் வராதபடி பெரும்பான்மை மக்கள் தேர்தலில் அவருக்கு எதிராக வாக்குரிமையை பிரயோகித்தார்கள். மைத்திரிபால அரசு பதவிக்கு வந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆனாலும் குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் செயல்படுவது அதன் செயல்பாட்டின் குறையே ஆகும்.
அவ்வாறு அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுவது ஏன்? போர்க்குற்றங்களுக்காக இராணுவத் தலைவர்கள் மீது வழக்குப் போட்டால் அதன் எதிர்மறை விளைவுகள் இராணுவத்தினுள்ளேயும், பொது மக்களிடையேயும் தோன்றக்கூடும் என்ற அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம். மைத்திரி–-ரணில் அரசுக்கு அதன் அரசியல் ரீதியான பக்க விளைவுகளைப் பற்றிய அச்சமும் இருக்கலாம்.
கோத்தாபய ராஜபக் ஷ அல்லது எந்த மாற்றுத் தலைவரோ அடுத்த பொதுத்தேர்தலில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசமைத்தால் அதை இந்தியா கட்டாயம் வரவேற்கும். மீண்டும் ராஜபக் ஷ குடும்பத்தினர் பதவிக்கு வந்தால், அவர்களின் செயல்பாடுகள் இந்தியா–- இலங்கை உறவின் அரசியல் முக்கியத்துவத்தை மனதில் கொண்டே செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறுதான் கடந்தகாலத்தில் மஹிந்த ராஜபக் ஷவும் ஓரளவு செயற்பட முயற்சிப்பதாக சொல்லிக் கொண்டார்.
கோத்தாபய ராஜபக் ஷ தலைமை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் சர்வாதிகார அரசை அமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகத் தோன்றவில்லை. கடந்த காலத்தில் நடந்த விடுதலைப் புலிகளுடனான போர், அவர் இராணுவத்தைப் பெருமளவில் உபயோகிக்க முக்கிய காரணியாக இருந்தது. தற்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. அது உருவாக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் சர்வாதிகார ஆட்சி அமைத்தால், அதை மக்கள் மௌனம் காத்து அனுமதிப்பார்களா? கட்டாயம் எதிர்ப்பார்கள்.
இலங்கையில் சர்வாதிகார ஆட்சி அமைக்கப்பட்டால் இந்தியா கட்டாயம் அதை வரவேற்காது. மாலைத்தீவில் நடந்து வரும் எதேச்சாதிகார விடயத்தில் இந்தியா எடுத்துள்ள எதிர்நிலையே இதற்கு ஒரு உதாரணமாகும். இந்தியா மாலைத்தீவில் எடுத்த இந்த நிலைப்பாடு இலங்கையில் சர்வாதிகார அரசு அமைக்க ஒரு பெரும் தடையாய் இருக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டினார்.
(ஆர்.ராம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM