தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள சென்னை காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மத்திய, ஊவா மாகாண அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான் ஆகியோர்  இன்று மாலை காவேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்தனர். 

இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதிய வாழ்த்து கடிதத்தை அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்தனர். 

உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என ஆறுமுகன் தொண்டமான் தமிழக செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.