(இரோஷா வேலு) 

வைத்தியரொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த நுவரெலிய தொழில் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட தொழில் அதிகாரியொருவரும் இன்று  காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நுவரொலியா தொழில் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்று தொடர்பில் ஆஜராகுவதற்காக நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த இரண்டு சிரேஷ்ட தொழில் அதிகாரிகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நுவரெலியாவிலுள்ள தொழில் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து இவ்வாறு குறித்த வைத்தியரிடமிருந்து இருவரும் இன்று காலை 9.55 மணியளவில் ஒருவர் 8000 ரூபாவும் மற்றையவர் 1000 ரூபாவும் இலஞ்சப்பணம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கையிலேயே கொழும்பிலிருந்து சென்றிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரில் ஒருவர் கல்முனை பகுதியில் கடமையாற்றும் தொழில் அதிகாரியாவதோடு, மற்றையவர் நுவரெலியா மாவட்டத்தின் தொழில் ஆணைக்குழுவின் ஆணையாளருமாவர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று நுவரெலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.  

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.