(எம்.மனோசித்ரா)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெரும் வருமானத்தைக் கொண்டே மத்தள விமான நிலையம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. 

மத்தள விமான நிலையத்தின் மூலம் மாதாந்தம் கிடைக்கப்பெரும் வருமானத்தை விடவும் அதற்கான செலவு அதிகமாகவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மதுகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், 

மத்தள விமான நிலையத்தின் மூலம் 12 இலட்சம் ரூபாய் மாதாந்த வருமானம் கிடைக்கின்றது. எனினும் அதற்கு 2500 இலட்சம் ரூபாய் செலவிடப்படுகின்றது. மத்தள விமான நிலையத்திற்கு ஒரு வெளிநாட்டுப் பிரஜை சுமார் 800 ரூபா வரையில் செலுத்தியுள்ளனர். 

முறையான ஒரு மதிப்பீட்டின்மையின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அடுத்ததாக இரண்டாவது விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை அமைப்பதாகக் கூறி தனது முகத்தை தானே உடைத்துக் கொள்வதைப் போன்று செயற்பட்டுள்ளனர்.

எனினும்  இது தொடர்பாக அரசாங்கத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வது தொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரியுடன் எமது நாட்டு விமான நிலைய அதிகாரிகள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

எனினும் இது வரையிலும் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் பத்திரம் சமர்பிக்கப்படும்.

எமது நாட்டின் விமான சேவை மூலமான வருமானத்தை அதிகரிப்பதற்காக உழைப்பதற்கு எமது நாட்டு விமான நிலைய அதிகாரிகளும் தயாராக இல்லை. தற்போடு கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலமான வருமானத்தைக் கொண்டே மத்தள விமான நிலையம் பராமரிக்கப்பட்டு வருகின்றது என்றார்.