ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து தன்னுடைய கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட ஒரு சிறுமியை பற்றிய அதிர்ச்சி செய்தி வெளியே கசிந்திருக்கிறது.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள்.  

ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கின் வடக்கு பகுதியில் யாஷ்டி இனத்தைச் சேர்ந்த ஆண்களை கொன்றுவிட்டு, பெண்களை வலுக்கட்டாயமாக கொண்டு சென்று தங்களுடைய பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

சில வருடம் கழித்து அந்த பெண்களை மற்றவர்களுக்கு அடிமைகளாக விற்று விடுகிறார்கள். ஏராளமான சிறுமிகள் மற்றும் பெண்கள் அவர்களிடம் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களிடமிருந்து சுமார் 1100 பெண்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அவர்கள் தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் மூலம் சில அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்திருப்பதாக அவர் கூறினார். அதில் குறிப்பாக, அவர்களிடம் சிக்கிய 8 வயதே நிரம்பிய ஒரு சிறுமி, பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு  அதன்பின் விற்கப்பட்டிருக்கிறாள் என்றும், அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள அந்த சிறுமி தன்னைத தானே தீ வைத்துக் கொண்டதாகவும், இதனால் அந்த சிறுமி 80 சத வீத தீக்காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.