(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தற்போது புதிதாக வரைபு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இந்த அறிக்கை தயாரிப்பு பணிகள் பூர்த்தியானதும் வழிநடத்தல் குழு உடன் கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழு அடுத்த கட்ட கூட்டத்தொடர் தொடர்பில் திகதி நிர்ணயம் செய்யப்படவில்லை. எனினும் வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த குழுவின் பணிகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. 

ஆகவே புதிய அரசியலமைப்புக்கான பணிகளில் நிபுணர்கள் குழு மும்முரமாக களமிறங்கியுள்ளது. 

ஏற்கனவே வழிநடத்தல் குழுவில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்கு உள்ளான நிபுணர் குழுவின் அறிக்கையை மீள பெற்று தற்போது புதிய வரைபு அறிக்கை துரிதமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.  ஆகவே இந்த அறிக்கை தயாரிப்பு பணிகள் பூர்த்தியானதும் உடனடியாக வழிநடத்தல் குழு கூடும். 

அதன்பின்னர் வழிநடத்தல் குழுவில் குறித்த வரைபு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். நிபுணர் குழுவின் அனைவரின் இணக்கத்துடன் புதிய அரசியலமைப்புக்கான வரைபு அறிக்கை கொண்டு வரப்படும் என்றார்.