(இராஜதுரை ஹஷான்)

மரண தண்டனை விடயத்தில் அரசாங்கம்  சர்வதேசத்தின் விருப்பங்களை கேட்காமல் நாட்டு  மக்களின் விருப்பங்களை கேட்க வேண்டும் அதற்காக மக்கள் தீர்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். 

வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ஊழல்வாதிகளை தண்டிப்பதாக கூறி ஆட்சியமைத்த அரசாங்கம் இதுவரை காலமும் குறித்த வாக்குறுதியினை நிறைவேற்றவில்லை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். மிகுதியாக காணப்படுகின்ற சொட்ப காலத்தில்  வாக்குறுதியை நிறைவேற்றும் என்பதும் சந்தேகமாகவே  காணப்படுகின்றது.

போதைபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய மரண தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனையினை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை கைவிடுமாறு சர்வதேச நிறுவனங்கள் கடந்த காலங்களில் பாரிய அழுத்தங்களை பிரயோகித்தது. ஆனால் அரசாங்கம் நாட்டு மக்களின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு மரண தண்டனையினை அமுல்படுத்துவதில் உறுதியாகவே காணப்படுகின்றது. 

நாட்டு மக்கள் மரண தண்டனையினை நிறைவேற்றும் விடயத்தை பெரிதும் வரவேற்றுள்ளனர். ஆகவே பொது மக்களின் விருப்பத்திற்கு இணங்க அரசாங்கம் செயற்பட வேண்டும். ஒரு போதும்  மரண தண்டனையினை நிறைவேற்றுவதை கைவிட முடியாது.  இதற்காக மக்கள் தீர்ப்பினை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு மேற்கொண்டால் சாதகமான முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.