தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 34.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 194 ஓட்டங்களை நிர்ணயித்து உள்ளது. 

அந்த வகையில் இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஆரம்பமான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன் பிரகாரம் களமிறங்கிய இலங்கை அணியினர் தென்னாபிரிக்க அணியின் பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்களை சேகரிப்பதற்கு பதிலாக விக்கெட்டுக்களை வாரி வழங்கினர். முதலாவது களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க ஜோடி முதலாவது ஓவரின் மூன்று பந்துகளை எதிர்கொண்டபோதே பிரிவடைந்தது.

இதற்கிணங்க நிரோஷன் திக்வெல்ல மூன்று பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 2 ஓட்டங்களுடன் ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து துடுப்பெடுத்தாட களம்புகுந்த குசல் மெண்டீஸ் ரபடாவின் இரண்டாவது ஓவரில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தபடியாக உபுல் தரங்க 10 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையிலும் இவரையடுத்து அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 8 பந்துகளை எதிர்கொண்டு 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

10 ஓவர்கள் நிறைவடையும் போது இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் பிறகு இணைந்த குசல், திஸர ஜோடி தென்னாபிரிக்க அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தது. 

இதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கிய குசல் மற்றும் திஸர ஜோடி 13.2 ஓவர்கள் இருக்கும்போது இருவருமாக இணைந்து 28 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து 15.2 ஓவர்கள் இருக்கும் போது இலங்கை அணி 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனது.

இதன் பின்னர் அதிரடியாக ஆட்டம் காட்டிய திஸர பெரேரா 30 பந்துகளுக்கு எட்டு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 49 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சம்ஸியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

குசல் பெரோ மற்றும் திஸர பெரேரா ஆகியோர் இணைந்து இலங்கை அணிக்காக 55 பந்துகளை எதிர்கொண்டு 92 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். 

இதன் பின்னர் குசலுடன் ஜோடி சேர்ந்தார் அகில தனஞ்சய 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆரம்பத்தில் 100 ஓட்டங்களை இலங்கை  அணி தாண்டுமா? என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் இருந்தது இருப்பினும் இந்த கேள்வியை இரசிகர்கள் மனதிலிருந்து தனது துடுப்பாட்டம் மூலமாக அழித்தார் குசல் இறுதியாக 30.3 ஓவரில் 72 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்களாக  81 ஓட்டங்களை பெற்றிருந்தபோது குசல் பெரேரா சம்சியுடைய பந்தில் மில்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இலங்கை அணி அடுத்துடுத்து விக்கெட்டுக்களை இழக்க இறுதியாக 34.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன்பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 194 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

தென்னாபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் ரபடா 41 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் சம்சி 33 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் லுங்கி நிட்ஜி 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.