இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலம், ராய்காட் மாவட்டம், அம்பனேலி மலைப்பகுதியில் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் பயணித்த பஸ் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் பலியாகியுள்ளனர்.

கோவாவில் உள்ள கொங்கன் கிரிஷி வித்யாபீத் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மஹாபலீஸ்வர் பகுதிக்கு ஒரு தனியார் பஸ்ஸில் சுற்றுலாச் சென்றனர். அங்குப் பயணத்தை முடித்து கோவா திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம், அம்பெனலி மலைப்பகுதியில் பஸ் வந்த போது, இன்று நண்பகலில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 34 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் விபத்தில் சிக்கி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.