கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த இன்று பிற்பகல் 3.30 முதல் இரவு 7.30 வரை விசேட வாகனப் போக்குவரத்துத் திட்டமொன்றை பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த காலப் பகுதிக்குள் வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் ரயில் நிலையத்துக்கருகில் இருந்து கெடபே வரை வாகனப் போக்குவரத்து ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கெடம்பே தியகபனாராமாய அருகில் உள்ள சுற்றுவட்டத்திலிருந்து கண்டி மணிக்கூட்டு கோபுரம் வரை மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்தும் நகரத்தை நோக்கி மாத்திரமே வாகனத்தை செலுத்த முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.

தெய்யன்வல சம்போதி மாவத்தை, சுதுகும்பொல டி,பி தென்னகோன்மாவத்தை, வில்லியம் கொபல்லாவ மாவத்தையிலிருந்து சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை வரை உள்ள ஹீருஸ்ஸகல ஆகிய வீதிகளில் பஸ்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சிறிய ரக வாகனங்கள் மாத்திரம் இருவழிப் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நகரத்தின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த கடந்த 16 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட வாகனப் போக்குவரத்துத் திட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.