கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் நோக்கி சென்ற  ரயிலுக்கு ஒரு கும்பல் சரமாரியாக கற்கள் எறிந்ததில் ரயில் கண்ணாடி சேதமடைந்ததுடன் சாரதியும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம்பற்றி தெரியவருவதாவது,

 கொழும்பிலிருந்து தலைமன்னார் பியருக்கு புறப்பட்டு சென்ற  ரயில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் ரயில் சாரதியை நோக்கி சரமாரியாக கல் எறிந்துள்ளதாகவும்

இதனால் ரயில் எஞ்சின் கண்ணாடிகள் சேதமடைந்ததுடன் ரயில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தால் ரயில் பேசாலை புகையிரத நிலையத்தை வந்தடைந்ததும் பாதிக்குள்ளாகிய ரயில் சாரதி ரயிலை பேசாலை புகையிரத நிலையத்தில் தரித்து விட்டு பேசாலை பொலிஸில் முறையீடு செய்வதற்கு சென்றபோது சம்பவம் நடைபெற்ற இடமானது மன்னார் பொலிஸ் நிலைய எல்லைப் பகுதியைச் சார்ந்தமையால் பேசாலை பொலிஸாரின் உதவியுடன் மன்னார் பொலிஸாரிடம் புகாரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தால் ரயில் பேசாலை ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் பின்பே தலைமன்னார் பியருக்கு நேரம் தாழ்த்தி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.