இந்திய கிரிக்கெட்  வீரர்களில் மிகவும் பிரபலமானவர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் மஹேந்திரசிங் டோனி.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் தலைவராக திகழ்ந்தவர் டோனி. இவர் இந்திய அணிக்கு டி20, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் செம்பியன்ஸ் டிரொபி ஆகியவற்றை பெற்று கொடுத்துள்ளார். மூன்று உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த ஒரே தலைவர் இவர்தான்.

இந்திய அணியில் அறிமுகமாகும் போது நீண்ட முடியுடன் வலம்வந்தார். இவரை பின்பற்றி பெரும்பாலான ரசிகர்கள் நீளமாக முடி வளர்க்க ஆரம்பித்தனர். அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் கூட டோனியை சிகை அலங்காரத்தை வெகுவாக பாராட்டினார்.

துடுப்பாட்டத்தில் அசூர பலம் படைத்த டோனி, அவரது ஹெலிகொப்டர் ஷொட் மூலம் ரசிகர்களை தனது பக்கம் இழுத்தார். ஆடுகளத்தில் எந்தவொரு நெருக்கடி காலத்திலும் இயல்பாக இருப்பது போன்ற பழக்கத்தால் கோடான கோடி ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு நிறுவனம் பிரபலமான விளையாட்டு வீரர் யார்? என்பது குறித்த ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை டோனி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

டோனி 7.7 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 6.8 சதவீதமும், விராட் கோலி 4.8 சதவீதம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது 10 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையை தல டோனி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.