(எம்.எம்.மின்ஹாஜ்)

நல்லாட்சியில் பல்வேறு குறைப்பாடுகள் இருந்தாலும் எமது அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் இனவாதத்திற்கு அடிப்பணிய மாட்டார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை இன கலவரத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு நேற்று பேருவளையில் நடைபெற்றது. இதன்படி கலவரத்தினால் சேதமடைந்த 122 வர்த்தக நிலையங்களுக்கும் வீடுகளுக்கும் 188 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகள் இழைத்த பாரிய விளைவின் காரணமாகவே தற்போது நஷ்டஈடு வழங்க வேண்டிய தேவை  ஏற்பட்டது. அரசியல் வாதிகளினாலேயே இனவாதம் போஷிக்கப்படுகின்றது. அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு இனவாதத்தை தூண்டுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக போராட வேண்டும். இன,மத அடிப்படையில் வாக்குகளை பெறுவதனை நாம் நிறுத்த வேண்டும். 

அத்துடன் இனங்களுக்கிடையிலான பிரச்சினையை தீர்க்கும் வரைக்கும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரசியல்வாதிகளினாலேயே இன கலவரங்கள் ஏற்படுகின்றன. 

நல்லாட்சியில் பல்வேறு குறைப்பாடுகள் இருந்தாலும் எமது அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் இனவாதத்திற்கு அடிப்பணிய மாட்டார்கள். பேருவளையை போன்று கிந்தோட்டை மற்றும் அம்பாறை கலவரத்தினால் பாதிக்கப்பட்டோருக்கும் நஷ்ட ஈடு வழங்குவோம். 

அத்துடன் வன்முறைகளில் ஈடுப்படுவோருக்கு நான் ஒருபோதும் அரசியல் ஒத்துழைப்புகள் வழங்க மாட்டேன். ஆகவே இனிமேலும் இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.