(எம்.சி.நஜிமுதீன்)

மாகாண சபைத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராக இருந்தால் தோல்வியடைவார் எனவும் தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலமையகத்தில் நடைபெற்றது. அதில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டின் பொருளாதாராம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தொழில்துறை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 6.3 சதவீதமாக இருந்த வர்த்தகத்துறை இவ்வருட ஆரம்பப் பகுதியில் 1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்தினால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. எனவேதான் தேர்தல் நடத்தவுள்ளதாக் கூறிக்கொண்டு வர்த்தகத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான துறைகள் பற்றி கவனம் செலுத்துகிறது.

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறெனின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஏன் விற்பனை செய்ய வேண்டும். அத்துறைமுகத்திற்கு கப்பல் வருவதில்லை எனக் குறிப்பிட்டே விற்பனை செய்தனர். சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமெனின் அந்த ஆதரவுடன் துறைமுகத்திற்கு கப்பல்களைக் கொண்டு வந்திருக்கலாம். 

நெல் களஞ்சியப்படுத்துவதற்காக மத்தள விமான நிலையத்தை இந்தியா வாங்கவில்லை. அவ்விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவற்காகவே வாங்கியுள்ளது. அவ்வாறெனின் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு ஏன் நல்லாட்சி அரசாங்கத்தினால் அங்கு விமானங்களை கொண்டு வரமுடியாது?

மேலும் விமான சேவைகள் சட்டத்தை மாற்றியமைத்தே மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கவுள்ளனர். ஆகவே அந்தச் சட்டத்தைப் பின்பற்றி கட்டுநாயக்க விமான நிலையத்தையும் வெளிநாடுகளுக்கு விற்கமாட்டார்கள் என எவ்வாறு நம்பிக்கை கொள்வது? எனவே அரசங்கத்திடம் திட்டமிட்ட கொள்கையில்லை. 

மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்கலாம் நிறைவடைந்து பத்து மாதங்களும் ஐந்து நாட்களுமாகின்றன. எனினும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. 2017 ஆண்டு செப்டெம்பர் மாதம் இருபதாம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் , 2018 மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே பிரதமர் வழங்கும் வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றுவதில்லை.

அத்துடன் இன்னும் 70 நாட்களில் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதுடன் இன்னும் 44 நாட்களின் பின்னர் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலமும் நிறைவடையுள்ளது. எனினும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து தேர்தலை பிற்போடுவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மேலும் விடுதலைப்புலிகள் தொடர்பிலான கருத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்துள்ள போதிலும் அவரின் பாதுகாப்பு உட்பட சலுகைகள் நீக்கப்படவில்லை.

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டணை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறன குற்றச்செயல்களுக்கு மரண தண்டணை வழங்குவது ஒரு தீர்வாக அமையலாம். எனினும் மரண தண்டணைக்குச் செல்வதற்கு முன்னர் வேறு வகையிலான தீர்மானங்களும் உள்ளன. எனவே பிரபல்யம் அடைவதற்காகவே ஒரேயடியாக  மரண தண்டணைத் தீர்வுக்குச் சென்றுள்ளதாக நான் கருதுகிறேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பிரபல்யம் அடைவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை கடந்த காலங்களிலும் முன்வைத்துள்ளார். எனினும் அவற்றை நிறைவேற்ற முடியாது போயுள்ளது. எனவே இதனையாவது அவருக்கு நிறைவேற்றக் கிடைத்தால் சிறந்தது. அவரால் மீண்டுமொரு முறை நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது. அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டால் தோல்வியடைந்து விடுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.