(எம்.மனோசித்ரா)

கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தத்தில் இலங்கையும் உலக வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன.

பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது இலங்கைச் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுடன் இணைந்ததாக  பொதுக்கல்வியின் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் பல்வகைப்படுத்துவதாகக் காணப்படுகின்றது. இதே வேலை பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும் ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற மூலோபாய பாடங்களுக்கு பெருமளவு முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றது. 

இத் திட்டத்தின் மூலம் க.பொ.த உயர்தரத்தில் தெரிவுகள் விரிவாக்கப்படவுள்ளன. அந்தவகையில் மாணவர்கள் கலை, முகாமைத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளில் இருந்து தமக்குப் பொருத்தமான பாடங்களை தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படுகின்றது. ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான பாடவிதானங்கள் டிஜிட்டல் முறையில் கணனிகளுடாக பயன்படுத்தக்கூடியதாக விருத்திசெய்யப்படும். அதிகமாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்கள் மீது கவனம் செலுத்தப்படவுள்ளது. 

கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை வியாபிப்பதில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அதிக அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடு என்ற ஸ்தானத்தை எட்டுவதற்கு ஒட்டுமொத்த ரீதியான கற்றல் வெளிப்பாடுகளை மேலும் முன்னேற்றவேண்டியுள்ளது.

இத் திட்டம் தொடர்பில் உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் செயலணித் தலைவருமான ஹர்ஸ அடுரூபனே தெரிவிக்கையில்,

"பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது நடுத்தரவருமானம் மற்றும் உயர் வருமானமுள்ள கல்விக் கட்டமைப்புக்களை உடையதான சர்வதேச தராதரத்திற்கு ஏற்புடையதாக முன்பள்ளி மற்றும் இரண்டாம் நிலைக்கல்விக் கட்டமைப்பை அரசாங்கம் நவீனமயப்படுத்துவதற்கு துணையாக அமையும்.

பொதுக் கல்வி நவீன மயப்படுத்தல் திட்டத்தினால் ஆதரவளிக்கப்படும் முக்கிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுக் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் ஆகியன  கற்றல் வெளிப்பாடுகளின் முன்னேற்றத்திற்கும்  மாணவர்களின் மத்தியில் உயர் சமூக உணர்வுபூர்வ திறன் வெளிப்பாடுகளுக்கும் வழிகோலும்" என்றார். 

கைச்சாத்திடப்பட்டுள்ள பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது பாடசாலை கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பாடங்களையும் அனுபவத்தையும் கொண்டு கட்டியெழுப்பப்படுவதுடன் பொதுக் கல்வித் துறைக்கான உலக வங்கியின் ஆதரவை வலுப்படுத்துவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.