இந்தியாவின் திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை வைத்தியம் என்ற பெயரில் யூ-டியூப் காணொளிகளைப் பார்த்து பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்ததில் குறித்த பெண் உயிரிழந்தார். 

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி, கணவர் கார்த்திகேயன் அவரது நண்பருடன் பிரசவம் பார்த்ததில் மனைவி கிருத்திகா உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

புதுப்பாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் மற்றும் ரசாயன கலப்பில்லாத உணவுப் பொருட்கள் பயன்படுத்துவது போன்றவைகளில் ஆர்வம் உள்ள இவர், தனது மனைவி கிருத்திகா கர்ப்பமாக இருந்த நிலையில் வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து அவரது நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருத்திகா பிரசவ வலியால் துடித்த நிலையில் நண்பர் பிரவீன் என்பவரை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதன்போது கிருத்திகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது வலியால் துடித்த கிருத்திகா வீட்டிலேயே இறந்துள்ளார். 

வீட்டில் பிரசவம் பார்த்தது குறித்து  கார்த்திகேயன் தெரிவிக்கையில். "மருந்து மாத்திர சாப்டாம, ஹாஸ்ப்பிட்டல் போகாம வீட்டுலியே குழந்த பிறக்கனும்னு நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன். அதுதான் என்னோட விருப்பமா இருந்துச்சு. அதுக்காக இயற்கை உணவு அதிகமா எடுத்துக்கிட்டோம்," என அழுது கொண்டே  தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன் தெரிவிக்கும்போது, "எனக்கு மூன்று மகள்கள் அதில் மூத்த மகள் கிருத்திகாதான்  மருமகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். என் பொன்னு கர்ப்பமானதுல இருந்தே மகள், மருமகன் இரண்டு பேர் கிட்டயும் ஹாஸ்ப்பிட்டல் போக சொன்னேன். ஆனா அவங்க அதுக்கு ஒத்துக்கல. வீட்டிலேயே பிரசவம் பாக்கறதா சொன்னாங்க. மருமகனோட நண்பரும் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பாத்ததா சொன்னாங்க."

"போன ஞாயிற்றுக்கிழமை மருமகன் போன் செய்து பெண்குழந்தை பொறந்திருக்கு, கிருத்திகாவுக்குதான் மூச்சு பேச்சு இல்ல நீங்க வாங்கன்னு சொன்னாரு. நாங்க அப்பவே போனோம். போய் பாக்கும்போது என் பொன்னு மயக்கமா இருந்தா. உடனே ஆம்புலன்ஸ வர சொல்லி அரசு வைத்தியசாலைக்கு கொண்டுபோனோம். அங்க டாக்டர் பாத்துட்டு ஏற்கனவே இறந்துட்டதா சொன்னாங்க," என்றார் கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன்.

மேலும் பிரசவம் பார்க்கும்போது கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் உடன் இருந்ததாகவும், யூ டியூபை பார்த்து பிரசவம் செய்ததாகவும் மருமகன் கூறியதாகவும் சொன்னார்.

கிருத்திகா இறந்தது குறித்து நல்லூர் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உதவி ஆய்வாளர் தனசேகர், தெரிவிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேந்திரன் என்பவர் புதுப்பாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியில் தனது மகளுக்கு வீட்டில் பிரசவம் நடைபெற்றபோது இறந்ததாகவும், மகள் கிருத்திகாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பிரிவு 174ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

கிருத்திகாவின் உடல் கடந்த திங்கள்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் மின்தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட அரசு வைத்தியசாலையின் இருப்பிட வைத்திய அதிகாரி தெரிவித்தபோது, கடந்த 23 ஆம் திகதி கிருத்திகா இங்கு கொண்டுவரப்பட்டார். அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்திருந்தார். அன்றே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் பொலிஸாரிடம் கொடுத்துவிடுவோம். அதில் என்ன பிரச்சனை என்பது குறித்து காவல்துறையும், சுகாதாரத்துறையும்தான் விசாரணை செய்யும் என்றார்.

"பிரசவ நேரத்தில் 500 மில்லி முதல் 1 லிட்டர் வரை உதிரப்போக்கு இருக்கும். அப்போது அந்த பிரச்சனையை கையாளக்கூடிய வைத்தியர்கள் மட்டுமே பெண்னை சீரான நிலைக்கு கொண்டுவர முடியும். உதிரப்போக்கு நிற்காத நிலையில் ஒரு சில நேரங்களில் கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும்."

"கிருத்திகா நிச்சயம் உதிரப்போக்கு காரணமாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஆங்கில வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் என எந்தத் துறையானாலும் முறையான பயிற்சிகள் செய்யாமல் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு செயலும் விபரீதத்தை ஏற்படுத்தும். முறையான பயிற்சிகள் இன்றி யூ டியூப் மூலம் காணொளிகளை பார்த்து அதன் மூலம் பிரசவம் போன்ற மிக அதிக ஆபத்து மிகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது உயிரிழப்பு போன்ற கேடுகளையே விளைவிக்கும்,

இதனிடையே முறையற்ற வகையில் பிரசவம் பார்த்து உயிராபத்தை உண்டாக்கியதாக கார்த்திகேயன் குடும்பத்தினர் மீது திருப்பூர் மாநகர சுகாதார அலுவலர் சார்பில் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருத்திகா பிரசவித்த பெண் குழந்தைக்கு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத