(நா.தனுஜா) 

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பன வெறுமனே வெள்ளை யானைகளாகவே உள்ளன. அவற்றால் எவ்வித வருமானமும் இல்லாத ஒரு நிலையிலேயே அதனை சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு குத்தகைக்கு வழங்குகின்றோம் என அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனா மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் ராஜதந்திர ரீதியிலான முறுகல்நிலை இருந்துவரும் நிலையில் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் இந்தியாவுக்கு மத்தள விமான நிலையத்தையும் வழங்குவதன் மூலம் இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

மேலும் எதுவித வருமானங்களுமின்றி காணப்பட்ட சொத்துக்களை அந்நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் அனுகூலம் பெறமுடியும். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலமான வருமானத்தை சீனா பெற்றுக்கொண்டாலும் அதற்கான வரி மற்றும் செலாவணி வருமானம் என்பன இலங்கைக்கு உரியதாகையால் ரூபாவின் பெறுமதி உயர்வடையும் என்றார்.