(இராஜதுரை ஹஷான்)

"மத்தள விமான நிலையத்தை  இந்தியாவிடம் கையளிப்பதற்கு  அரசாங்கம் மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் எதிர்க்கமாட்டார்கள் . ஆகவே மக்களை அணிதிரட்டி போராடுவதே இதற்கான ஒரே வழி"  என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

"எமது நாட்டு தேசிய வளங்களை பிற  நாடுகளுக்கு   தாரைவார்த்து கொடுத்து  எதிர்கால சந்ததியினரை சர்வதேசத்திற்கு அடிமைப்படுத்தும் செயற்பாடுகளையே  அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிற்கு  விற்றதை போன்று தற்போது மத்தளை விமான நிலையத்தினையும்  இந்தியாவிற்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மத்தள விமான நிலையத்தை  இந்தியா  கைப்பற்ற நினைப்பது பொருளாதார நோக்கங்களுக்காகவே, விமான நிலையத்தை நிர்மானிக்கவோ அல்ல.  அவர்களின்   இராணுவ  நோக்கங்களை  செயற்படுத்தி பிற நாடுகளை கட்டுப்படுத்தவே மத்தள விமான நிலையத்தை பெற முயற்சிக்கின்றனர். இவ்விடயத்திற்கு அரசாங்கமும் உடந்தையாக இருக்கின்றது.

மத்தள விமான நிலையத்தினை நிர்வகிக்க முடியாது ஆகவே அதனை  இந்தியாவிற்கு  ஒப்பந்த அடிப்படையில்  வழங்க  தீர்மானித்துள்ளோம். என்று   சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை, அரசாங்கத்தின் இயலாமையினை வெளிப்படுத்துகின்றது.  எமது நாட்டு தேசிய வளத்தினை முறையாக நிர்வகிக்க முடியாத அரசாங்கம் எதற்கு? சர்வதேச ரீதியில்  மத்தள விமான நிலையம் ஒரு முக்கிய புள்ளியில் காணப்படுகின்றது. தங்களின் இயலாமையினை மறைக்க மத்தள விமான நிலையத்தின் மீது தொடர்ந்து குறைகளை  மாத்திரம் அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

மக்களின்  கவனங்களை திசைதிருப்பி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலைப்பாட்டிலே காணப்படுகின்றது. அரசியலில் இடம் பெறுகின்ற ஒவ்வொரு விடயங்களையும் பெரிதுப்படுத்தி முக்கியமான விடயங்கள் மறைக்கப்படுகின்றது. பின்னர் அவை யாருக்கும் தெரியாமல்  இரகசியமாக நிறைவேற்றப்பட்டு விடுகின்றது. இதுவே தேசிய  அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகின்றது.

கூட்டு எதிரணியினரும் தங்களது அரசியல் கொள்கைகளில் இருந்து விலகியுள்ளனர். புதிய அரசியலமைப்பு உருவாக்கம்  மத்தள விவகாரங்களுக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்காமல் பெயரளவிலே செயற்பட்டு வருகின்றது. இந் நிலமை தொடர்ந்தால் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே அரசியல்வாதிகளை நம்பி எவ்வித பிரயோசனமும் கிடையாது. மக்களை  ஒன்று திரட்டி போராட்டத்தை மேற்கொண்டு தீர்வு பெற வேண்டும் என்றார்.